Saturday, June 6, 2015

மழையே மழையே வாராயோ-நீரும் மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?




மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!


சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் இல்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!

உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!


வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயா வருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!

புலவர் சா இராமாநுசம்

Friday, June 5, 2015

எழுத்துதனை அறிவித்தான் இறைவன் என்றே எண்ணியதோர் காலமது இல்லை இன்றே!



எழுத்துதனை அறிவித்தான் இறைவன் என்றே
எண்ணியதோர் காலமது இல்லை இன்றே!
ஒழுக்கமின்றி அப்பணியைச் செய்வோர் சிலரால்
ஊர்தோறும் நடக்கின்ற செய்தி வரவால்!
இழுக்குமிக, ஐயகோ! பெருமை போச்சே
இதயத்தில் வேதனையே நிலையாய் ஆச்சே!
வழுக்குநிலம் ஆயிற்றாம் கல்வி இன்றே
வகுப்பறையில் ஆசிரியர் உணர்தல் நன்றே!


புலவர் சா இராமாநுசம்

Thursday, June 4, 2015

மனித நேயம் இல்லையா? மத்திய அரசே சொல்லையா?


மனித நேயம் இல்லையா?
மத்திய அரசே சொல்லையா?

தினமே, தொல்லைப் படுகின்றான்
தேம்பியே மீனவன் கெடுகின்றான்!
மனமே இரங்க வில்லையா
மனதில் சுரக்க சொல்லையா?


சுண்டைக் காய்போல் அந்நாடே
சொன்னால் வெட்கம் பெருங்கேடே!
அண்டையில் இருந்தே தரும்தொல்லை
அளவா? அந்தோ துயரெல்லை!

கச்சத் தீவைக் கொடுத்தாரே
காரணம் எதுவோ ?கெடுத்தாரே!
அச்சப் பட்டே மீனவனும்
அல்லல் படுவதைக் காண்பீரே!

படகொடு பிடித்தே மீனவரைப்
பாழும் சிறையில் தள்ளுகின்றான்
இடமிலை மீனவர் உயிர்வாழ
எண்ணமும் உமக்கிலை அவர்வாழ

மாநில அரசையும் மதிப்பதில்லை
மத்திய அரசுக்கோ செவியில்லை
நாமினி செய்வதை ஆய்வோமா?
நல்லது நடப்பின் உய்வோமா?

புலவர் சா இராமாநுசம்

Wednesday, June 3, 2015

ஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார் அவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார்!



ஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார்
அவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார்!
மாறுவது மனிதகுணம்! அறிந்த உண்மை!
மாற்றமில்லை இன்றுவரை இந்தத் தன்மை
கூறுவது என்னவென ஆய்தே கூறும்!
குற்றமொடு சினம்கூட குறைந்து மாறும்!
தேறிவிடும்! தெளிவடையும் மனித குலமே
தேவையில்லா சாதிமதம் நீங்க நலமே!


புலவர் சா இராமாநுசம்

Tuesday, June 2, 2015

முடிந்தவரைப் பிறருக்கு உதவ வேண்டும் முடியவில்லை என்றாலும் முயல வேண்டும்!



முடிந்தவரைப் பிறருக்கு உதவ வேண்டும்
முடியவில்லை என்றாலும் முயல வேண்டும்!
கடிந்தொருவர் பேசினாலும் பொறுத்தல் வேண்டும்
கண்ணியமாய் அவர்பிழை உணர்த்த வேண்டும்!
வடிந்துவிடும் வெள்ளமென வந்தக் கோபம்-உடன்
வற்றிவிட அவர்நிலையோ பார்க்கப் பாபம்!
விடிந்தவுடன் இருளோடி போதல் போன்றே –அவர்
வெட்கமுற தலைசாயும் நிலையே சான்றே!


புலவர் சா இராமாநுசம்

Sunday, May 31, 2015

விருந்து, உண்ணும் வயதில்லை-நாளும் விடுமா வேதனை! நோய்தொல்லை!



விருந்து, உண்ணும் வயதில்லை-நாளும்
விடுமா வேதனை! நோய்தொல்லை!
மருந்தும் உணவாய்ப் போனாலும்-நான்
மனத்தால் இளைஞன்! ஆனாலும்!
இருந்தே எழுதித் வருகின்றேன்-தினம்
இயன்றதை வலைவழி தருகின்றேன்!
வருந்த எனக்கென ஏதுமில்லை-இந்த
வலைதரும் உறவுக்கும் சேதமிலை!


புலவர் சா இராமாநுசம்