Thursday, May 28, 2015

கோடி தரினும் மயங்காதே-ஏற்ற கொள்கையைக் காக்கத் தயங்காதே!



ஓடி,ஓய்வெனில் விளையாடு!-தமிழ்
உணர்வை ஊட்டி நீயாடு!
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல,
பண்பை என்றும் நீநாடு!
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப்
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு!
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
கொள்கையைக் காக்கத் தயங்காதே!


இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
எண்ணி எதையும் செய்வாயே!
செயற்கையைத் தேடி அலையாதே-நம்
செந்தமிழ் பேச மறக்காதே!
முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
முயன்றால் வெற்றி அவ்வினையாம்
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே!

ஒவ்வொர் நாளும் விளையாடு!-பழுது
உரிமைக்கு வந்தால் போராடு!
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர்
ஏய்க வந்தால் நீசாடு
இவ்வழிப் போற்றி விளையாடு-எனில்
என்றும் வாரா ஒருகேடு
செவ்வழி இவையே நலங்காண-பிறர்
செப்பிடப் பெருமை உளம்பூண

புலவர் சா இராமாநுசம்

Wednesday, May 27, 2015

மட்டைப் பந்து விளையாட்டே –ஏனோ மட்டுமா நமது விளையாட்டே!


மட்டைப் பந்து விளையாட்டே –ஏனோ
மட்டுமா நமது விளையாட்டே!
திட்ட மிட்டே ஆடுகின்றார்- பொருளைத்
தேடிட சூதையும் நாடுகின்றார்!
வெட்ட வெளிச்சம் ஆயிற்றே- முன்னால்
விளைவும் மறந்து போயிற்றே!
கொட்டிக் குவிந்திட பணமதிலே- பலர்
கொடிகட்டி பறப்பதோ தினமதிலே!


கூடிப் பார்த்திட பெருங்கூட்டம் –அதில்
குறைநிறை பேசிட ஒருகூட்டம்!
வாடிக்கை ஆனது இன்றிங்கே –நாளும்
வளர்ந்தால் வருமா நன்றெங்கே!
ஆடிடப் பணமும் பெறுகின்றார்-விளம்பரம்
அளித்திட அள்ளியும் தருகின்றார்!
வாடிடும் பல்வகை விளையாட்டே- அவையும்
வாழ்ந்திடச் செய்வீர் நம்நாட்டே!

புலவர் சா இராமாநுசம்

Monday, May 25, 2015

தினம்போல இயற்கைதனை அழித்தோமே அன்றோ-செய்த தீவினையால் இந்நிலையைப் பொற்றோமே இன்றோ!



அனல்காற்று நாள்தோறும் தாங்காத வெய்யில்-
ஐயகோ வழிவதும் தண்ணீரோ மெய்யில்!
புனல்கூட சுடுகிறது தொட்டாலே எங்கும்-அதனால்
புல்பூண்டும் கரிகிவிட வெம்மையது பொங்கும்!
மனம்நோக மாவினமும் பசியாலே வாடும்- வான்
மழையின்றி உயிர்வாழ்தல் எவ்வண்ணம் கூடும்!
தினம்போல இயற்கைதனை அழித்தோமே அன்றோ-செய்த
தீவினையால் இந்நிலையைப் பொற்றோமே இன்றோ!


பருவங்கள் பொய்யாகி மழைமாறிப் போகும்-மேலும்
பாழாக விளைநிலமும் பயிரின்றி ஆகும்!
கருமேகம் வந்தாலும் பலனின்றி செல்ல-கண்டே
கண்ணீரில் விவசாயி குடும்பமே தள்ள!
உருவாகும் புயலாலே அழிவேதான் மிஞ்சும்-என்றே
உலகெங்கும் நாள்தோறும் வரும்செய்தி! துஞ்சும்,!
ஒருவாறு நாமறிய அறிவிப்பே! காண்பீர்! –உடன்
உணர்தினி இயற்கையைக் காத்திடப் பூண்பீர்!

சொய்வோமா!!!?

புலவர் சா இராமாநுசம்