எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன் –வீணில்
இதயத்தில் சுமையே சேர்க்கின்றேன்!
கண்ணியம் அறவே காணவில்லை-பெற்ற
கடனை மறுக்க நாணவில்லை!
புண்ணியம் பாவம் பார்ப்தெவர்?- பெரும்
பொருளைத் தேடவே முயலாதவர்!
மண்ணிலே பிழைக்கத் தெரியாதவர்-என்றே
மக்கள் நினைப்பதை அறியாதவர்!
குடிப்பதும் பெருமை ஆயிற்றாம் –என்ற
கொடுமை நிலையாய் போயிற்றாம்!
படிப்பதும் விற்பனைப் பொருளாகும்-வசதி
படைத்தவர் இன்றெனில் இருளாகும்!
வெடிப்பது ஏழைகள் நெஞ்சம்தான் –ஏற்ற
விலைதரும் எவர்க்கும் மஞ்சம்தான் !
துடிப்பது இழந்த தோணியென-வாழ்வைத்
தொலைத்தவன் இருப்பதா!? கோழையென!?
புலவர் சா இராமாநுசம்