Friday, May 8, 2015

ஓடின ஐந்து ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே!




ஓடின ஐந்து ஆண்டுகளே-என்
உயிரென வாழ்ந்து மாண்டவளே!
தேடியே காணும் இடமன்றே-அன்புத்
தேவதை மறைந்த இடமொன்றே!
வாடிய மலராய் நானாக –அதன்
வாசனை, அவளோ விண்னேக!
பாடிய பாடல் அன்றிங்கே-இன்று
படைத்தேன் படித்திட நீரிங்கே!


என்றும் அன்புடன் இருப்பாயா
என்னை விட்டுப் பிரிவாயா!
அன்று உன்னைக் கேட்டேனே
அதற்கு என்ன சொன்னாய்நீ!
நன்று அன்று இக்கேள்வி
நமது காதல் பெருவேள்வி!
என்று சொன்ன தேன்கனியே
எங்கே போனாய் நீதனியே!

கட்டிய கணவன் கண்முன்னே
காலன் அழைக்க என்கண்ணே!
விட்டுப் போனது சரிதானா
விதியே என்பது இதுதானா!
மெட்டியைக் காலில் நான்போட
மெல்லியப் புன்னகை இதழோட!
தொட்டுத் தாலி கட்டியன்
துடிக்க வெடிக்கப் போனாயே!

பட்டு மேனியில் தீவைக்க
பதறும் நெஞ்சில் முள்தைக்க!
கொட்டும் தேளாய் கணந்தோறும்
கொட்ட விடமாய் மனமேறு்ம்!
எவ்வண் இனிமேல் வாழ்வதடி
என்று உன்னைக காண்பதடி
செவ்வண் வாழ்ந்தோம் ஒன்றாக
சென்றது ஏனோத் தனியாக!

எங்கே இருக்கிறாய் சொல்லிவிடு
என்னையும அழைத்துச் சென்றுவிடு!
அங்கே ஆகிலும் ஒன்றாக
அன்புடன் வாழ்வோம் நன்றாக!
இங்கே நானும் தனியாக
இருத்தல் என்பது இனியாக!
பங்கே என்னில் சரிபாதி
பரமன் காட்டிய வழிநீதி!
செய்வாயா--?

புலவர் சா இராமாநுசம்

Tuesday, May 5, 2015

வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன் விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!



ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்ப்பீரே-மாறிக்
கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
சண்டைகள் தேவையா இனிமேலும்


சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
பாவம் மக்கள் ஊர்தோறும்

நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!

புலவர் சா இராமாநுசம்

Sunday, May 3, 2015

உண்ணில்லார் இன்றுபலர்! வாடுவதோ பசியால்! உதவுங்கள் நல்லோரே ஏற்றவழி கண்டே!



எண்ணில்லார் இறந்தார்கள் நேபாளம் தன்னில்
ஏற்பட்ட நிலநடுக்கம்! ஐயகோ! எண்ணில்
கண்ணில்தான் நீர்வற்ற அழுகுரலே எங்கும்
காண்கின்ற தொலைக்காட்சி காட்டுவது அங்கும்
புண்ணில்தான் வேல்தன்னை பாய்ச்சுவதைப் போன்றே
பொழிந்திட்ட மாமழையும் கொடுமைக்குச் சான்றே
உண்ணில்லார் இன்றுபலர்! வாடுவதோ பசியால்!
உதவுங்கள் நல்லோரே ஏற்றவழி கண்டே!


புலவர் சா இராமாநுசம்