Saturday, March 28, 2015

முகநூலில் வந்தவை!





அன்பான கணவனுக்கும் மனைவிக்கும் அறுபது வயதைத் தாண்டினாலும் அவர் உள்ளம் இருபது வயது இளமையோடு தான்
இருக்கும்! ஐயமில்லை! ஆனால்...? இருவரில் ஒருவர் பிரிய நேர்ந்து
விட்டால்..!மற்றவர் வாழ்வு ? அதனால் விளையும், சோகம் ! சொல்லும் தரமல்ல!

உண்மையான காதலுக்குத் தான் எவ்வளவு ஆற்றல்!!!!!? காதல் முறிந்தால் அறிவும் அழிய பைத்தியமே பிடிக்கிறது! உடலும் கெடுகிறது!! உணர்வும் அற்றுப் போகிறது!இறுதியாக இறப்பு வரை செல்கிறது!

வெகு தொலைவில் தெரியும் புகையைக் கட்டி ,அங்கே ஏதோ நெருப்புப் பற்றிக் கொண்டது, என்று சொன்னால்,பார்த்தவர் யாரும்
நீ போய் நேரில் பார்த்தாயா ?என்று கேட்பதில்லை! அப்படிக் கேட்பவன் அறிவுள்ளவனாக இருக்க முடியாது ! நெருப்பு , பற்றினால்தானே புகை வரும் என்ற ,யூகித்து அறிய வேண்டிய , பொது அறிவுகூட இல்லாத அவனைப் போல் ,சிலரை , நாம், நம்
வாழ்கையில் எதிர் கொள்வது ,அதுவும் அவன் அரசியல் வாதியாக
இருந்து விட்டால்!!!? விளைவு ! சொல்லும் தரமல்ல!


தேனீ என்பது தேன் இருக்கும் இடம் எதுவோ ,அங்கே போய்தான்
உட்காரும் எனவே தான் அதனைத் தேனீ என்று சொல்வர்! ஆனால் , சாதரண சாக்கடை மலத்திலும் உட்காரும் இறைவனுக்கு வைக்கும் பிராசாதத்திலும் உட்காரும் இதுபோலத்தான் ,உலகில் நாம்
காணும் ,பழகும் மனிதர்களில் இருவகைப் பட்டவர் உள்ளனர் இதனை நாம்தான்  அறிந்து  நடந்து கொள்ள  வேண்டும்
 

புலவர் சா இராமாநுசம்

Friday, March 27, 2015

நடக்கட்டும் !முழுயடைப்பு நாளை இங்கே-தமிழ் நாட்டினிலே ஓரணியாய் உணர்வும் பொங்க !



நடக்கட்டும் !முழுயடைப்பு நாளை இங்கே-தமிழ்
   நாட்டினிலே  ஓரணியாய்  உணர்வும்  பொங்க !
அடங்கட்டும்! எல்லாமே அசைதல் இன்றி- எங்கும்
   ஆலைமுதல்  சாலைவரை ஆளே யின்றி!
முடங்கட்டும் முழுதாக போக்கு  வரத்து-மக்கள்
   முன்வந்து பயணத்தை  செய்ய இரத்து!
தொடங்கட்டும் அறப்போரே ! நமதே! வெற்றி
    தொடரட்டும் ஒற்றுமையே என்றும் பெற்றி!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 25, 2015

காவிரிநீர் வடிகாலா எமது நாடே-மூர்க்க கர்நாடக அரசேநீ அடைவாய்க் கேடே!



காவிரிநீர் வடிகாலா எமது நாடே-மூர்க்க
கர்நாடக அரசேநீ அடைவாய்க் கேடே
பூவிரிய நீர்நிறைந்த வளமை தஞ்சை-இன்று
போயிற்று ஆயிற்றாம் நிலமோ புஞ்சை
வாய்விரிய பேசுகின்றார் மேடை ஏறி-ஆனால்
வரவில்லை ஓரணியில் உள்ளம் மாறி!
காயுண்டு கனிதன்னை எறிதல் உண்டா!-இனியும்
கட்சிகளே !உதிரிகளாய் காணல் தொண்டா

தன்முனைப்பு இல்லாமல் ஒன்று படுவீர் –ஏதும்
தடையின்றி பணிநிறுத்தம் வெல்ல விடுவீர்
துன்புறவே வாழ்கின்றான் உழவன் என்றும்-மேலும்
தொடர்ந்திடவே அணைகட்ட முயல இன்றும்
அன்பிலராம் கர்நாடகர் கேளாக் காதே-மத்திய
அரசுக்கும் இதனாலே வருமாம் தீதே
வன்புடையார் நாமென்று உணரச் செய்வோம்-எதிர்
வருங்கால சந்ததிகள் வாழ உய்வோம்

புலவர்  சா  இராமாநுசம்

Monday, March 23, 2015

வழுவாகும்! சட்டத்தைத் திரும்பப் பெறுவீர் –உழவர் வாழ்கின்ற வழிதன்னை விரும்பித் தருவீர்



மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும் இல்லை-ஆட்சி
மத்திய மாறினாலும் மாறாத் தொல்லை!
ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்ன தெல்லாம்மோடி
அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் எழுத்தாம்!
தூற்றுவதாய் எண்ணாதீர் போகும் போக்கேஎடுத்து
துல்லியமாய் காட்டுதந்தோ உற்று நோக்கே!
நேற்றுவரை இருந்தவர்கள் போன வழியேஐயா
நீங்களுமா..! போவதென்ன!? வருதல் பழியே

அழுகின்ற மீனவரின் அழுகுரலோ  ஒயவில்லைதினம்
அலைகடலில் அவன்சிந்தும் கண்ணீரோ  காயவில்லை
உழுவார்க்கு  உழுநிலமும்  உரிமை  உண்டா –அதனை
உடைக்கின்ற  சட்டமது செய்தல்  தொண்டா
எழுவாரா ! தொழில்செய்ய   எண்ண வேண்டும்-அவர்
இல்லையெனில் மண்ணைத்தான்  உண்ண வேண்டும்
வழுவாகும்! சட்டத்தைத்  திரும்பப்  பெறுவீர் –உழவர்
வாழ்கின்ற வழிதன்னை விரும்பித்  தருவீர்

புலவர் சா இராமாநுசம்