Friday, March 6, 2015

முகநூல் வித்துக்கள்!


  புலவர்  குரல்
------------


மிகப் பெரிய தவற்றைச் செய்து விட்டு , கவலைப் படாமல் ஒதுக்கி விட்டுச் செல்லும் மனம் படைத்தவர்களே சமுதாயத்தில் வாழவும் முன்னேறவும் முடிகிறது! அதுமட்டுமல்ல! அவர்களே வாழத் தெரிந்தவர்களாக உலகம் சொல்கிறது ! செய்த ,சிறு தவற்றையும் பெரிதாக்கிக் கொள்ளும் மனம் படைத்தவர்களாக இருந்தால் இந்த காலத்தில் வாழமுடியாது

சமுதாய வாழ்க்கையில் கெட்டவர்கள் எதிலும் துணிந்து இறங்கி விடுவார்கள்! விளைவு வெற்றியோ, தோல்வியோ எண்ணுவதில்லை!
ஆனால், நல்லவர்கள், நல்லது செய்வதற்கும் தயங்கித் தயங்கிச் செய்யாமலே விட்டு விடுகிறார்கள்! அதனால்தான் ,சமுதாயத்தில் தீமைகள் , தழைக்க , நன்மைகள் நலிவடைகின்றன!


உண்மையான காதல் தன்னலமற்றது! மற்றவருடைய இன்பத்தில் தான் இன்புறுவதும் துன்பங் கண்டு தான் துன்புறுவதும் என்று இருப்பதே காதலின் தூய்மைக்கு உரிய அடையாளமாகும்

வாழ்க்கையில் தவறே செய்யாதவர்களைக் காண்பது அரிது! தவறு செய்பவர்கள் அனைவரையும் திருத்திவிட இயலாது ! திருந்தக்கூடிய குணமுடையவரை மட்டுமே திருத்த முடியும்! கிளிக்குத் தான் பேசக் கற்றுத் தரமுடியும் ! குருவிக்கிக் கற்றுத் தர இயலுமா?

பிறருடைய அன்பை , நாம் பெற வேண்டுமென்றால், முதலில் நமது அன்பை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்! அதாவது அன்பு என்பது அதையே கொடுத்து பெற வேண்டிய ஒன்று என்பதை அனைவரும் உணர வேண்டும்!

புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, March 4, 2015

நடப்பதிலே எதுவுமே தெளிவு , காணோம் – மக்கள் நம்பிக்கைக் குறைகிறது தீர்வு வேணும்!




மாண்புமிகு  பிரதமருக்கு  எதிரி யாக-இங்கே
  மற்றவர்கள்  யாருமில்லை உதிரி யாக
தாண்டவமே  ஆடுவது  அவரின் கட்சி- நாளும்
  தவறாகப்  பேசுவதே அதற்கே  சாட்சி!

முன்னுக்குப் பின்முரணாகக் காரண மின்றி –பலரும்
   முறையற்றுப்  பேசுவதும்  சாரமே யின்றி!
என்னவெனக்  கேட்கின்றார்  நல்லோர் தாமே-பிரதமர்
   ஏற்றாரா? அவரமைதி ! சம்மத மாமே!

கட்சியிலே  கட்டுப்பாடு  அணுவு மில்லை –யார்
  காரணமோ? ஆய்வதிலே பயனு மில்லை!
ஆட்சியிலே அமைச்சருள்ளும் இணைப்பே யில்லை –பிரத
   அமைச்சருக்கு இதனால்  ஆமே தொல்லை!

அடக்குவதே நன்றாகும் பிரதமர் உடனே-நன்கு
    ஆள்வதற்குச்  செய்வதவர்  உரிய  கடனே!
நடப்பதிலே  எதுவுமே  தெளிவுகாணோம் – மக்கள்
   நம்பிக்கைக்  குறைகிறது  தீர்வு  வேணும்!

புலவர்  சா  இராமாநுசம்

Monday, March 2, 2015

வந்ததைய்யா வரவுசெலவு அறிக்கை ஒன்றே –ஏழை வடித்திடவும் கண்ணீரை நாளும் நன்றே



வந்ததைய்யா வரவுசெலவு அறிக்கை ஒன்றே –ஏழை
வடித்திடவும் கண்ணீரை நாளும் நன்றே
தந்ததைய்யா ஐயகோ ! மத்திய ஆட்சி-நடுத்
தரமக்கள் அழுகையே இதற்குச் சாட்சி

ஏற்கனவே விலைவாசி விண்ணை முட்டும்!-மேலும்
ஏற்றமெனில் !அவர்விழியில் இரத்தம் சொட்டும்
தீர்க்கவழி பாருமய்யா! வாழ விடுவீர்-என்ன
தொடர்கதையா?வேண்டாமே ! பின்னர் படுவீர்!

தேவைவரி மறுக்கவில்லை! இதுதான் முறையா?-மக்கள்
தினந்தோறும் பயன்படுத்தும் பொருளும் குறையா
சேவைவரி உயர்த்தியதும் முற்றும் சரியா –உடன்
சிந்திப்பீர்! இல்லையெனில் விலையே குறையா

புலவர் சா இராமாநுசம்