கொலைகொள்ளை நடக்காத நாளே இல்லை –இந்த
கொடுமைக்கு, விடிவுவர உண்டா எல்லை!
கலையெனவே கொலைகூட ஆயிற் றிங்கே –கயவர்
கைக்கூலி, பெறுகின்றார் கருணை எங்கே!?
நிலைகுலைந்து வாழ்கின்றார் மக்கள் நாளும்-சற்றும்
நிம்மதியே இல்லாமல் அச்சம் மூளும்
வலைவீசி தேடுவதாய்க் காவல் துறையும் –செய்தி
வருகிறது! என்னபயன்! எப்படிக் குறையும்!?
பொதுமக்கள் ! நமக்குமிதில் பொறுப்பு வேண்டும்-வீட்டைப்
பூட்டிவிட்டால் , போதாது காக்க ஈண்டும்!
எதைவீட்டில் வைப்பதென எண்ண வேண்டும்-அதற்கு
ஏற்றவழி என்னவெனக் ஆய்வீர் யாண்டும்!
முதுமக்கள் தனித்திருப்பின் , காவல் துறைக்கே-நாமே
முறையாகத் தெரிவிப்போம்! குற்றம் தவிர்க்க!
இதுபோல ,மேலும்சில நாமும் செய்வோம் –ஏதோ
இயன்றவரை நமைக்காக்க முயலின்! உய்வோம்!
புலவர் சா இராமாநுசம்