அன்பின் இனிய உறவுகளே!
இன்றைய தமிழ்மணத்தில் செந்தில் குமார் எழுதியுள் வேளான் விஞ்ஞானி வெங்டபதி ரெட்டியார் பெற்ற பத்மஸ்ரீ விருதுபற்றிப் படித்தேன்
விருது பெற்ற போது அவர் பெற்ற கசப்பான அனுபம் பலருக்குத் தெரியாது
2012 அவர் விருது பெற்றபோதே நான் எழுதியிருந்த பாடலை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டுகிறேன் காரணம் ,விவசாயம் எந்த அளவு மதிக்கப்
படுகிறது என்பதை அறிய!
பத்மஸ்ரீ விருது பெற்ற இவரின் பள்ளிப்படிப்பு
நாலாவது மட்டுமே! ஆனால் விவசாயத்துறையில்
கற்றவர்களை விட மேலான ஆய்வு செய்து, சவுக்கு
மரங்களையும்,கனகாம்பரப் பூக்கள் பல நிறங்களிலும்,
பல மடங்கும் அமோக விளைச்சல் தர தன் இயற்கை
அறிவின் மூலம் ஆய்ந்து வெற்றி கண்டார்
விவசாய விஞ்ஞானி யான இவரது திறன் கண்டே,இல்
மத்திய அரசு, படிக்காத மேதையான இவருக்கு இவ் விருதினைத்
தந்துப் பாராட்டியுள்ளது
.
படிக்காத மேதை யெனும் கெட்டியாரே-கூட
பாக்கத்து விவசாயி ரெட்டி யாரே!
கொடுத்தாரே பத்மஸ்ரீ விருது யின்றே-நம்
குடியரசு தலைவரின் கையால் நன்றே!
எடுத்தாராம் உழுதொழிலும் பெருமை காண-ரெட்டி
இனமக்கள் அனைவருமே மகிழ்ச்சி பூண!
தொடுத்தேனே ரெட்டிமலர் கண்டுப் பாவே-மேலும்
தொடரட்டும் நல்லாய்வு புதுவைக் கோவே!
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வா ரென்றே-தம்
உள்ளத்தில் தெளிவான உறுதி நின்றே!
பழுதுண்டு போனராம் பாடு பட்டும்-அதில்
பலனின்றி பல்வகையில் மனமே கெட்டும்
தொழுதுண்டு வாழவும் தோன்ற வில்லை-வேறு
தொழில்செய்ய அனுபவம் ஏது மில்லை!
அழுதுண்டு முடங்கிட எண்ண வில்லை-பல
ஆய்வுகள்! முயற்சிகள்! உண்டோ! எல்லை!
பூவிலே அவர்கண்ட முயற்சி வெற்றி-சவுக்குப்
போடுவதில் அவர்கண்ட முயற்சி வெற்றி!
மேவினார் வெங்கட பதியும் வெற்றி-மிக
மேலான விருதுக்கும் பெற்றார் வெற்றி!
பாவிலே சொல்வதா அவரின் வெற்றி-அவர்
பள்ளியே வயல்தானே! தந்த வெற்றி!
ஆய்விலே படித்தவரும் காணா வெற்றி-இவர்
அனுபவம் கண்டதே வெற்றி! வெற்றி!
வருத்தமுற அவர்சொன்ன செய்தி யொன்றே-நம்மை
வாட்டுகின்ற நிலைதானே கண்டோ மின்றே!
திருத்தமுற ஆய்ந்தேதான் விருது தந்தார்-அங்கே
தேடிவந்து வாழ்துவரோ? இல்லை! நொந்தார்!
நடிகர்களை! கலைஞர்களை! தேடிச் சென்றே-அரசியல்
நடிகர்கள்! அலுவலர்! அருகில் நின்றே
பிடிகவெனப் புகைப்படமும் எடுத்துக் கொள்ள-இவர்
பேச்சற்று நின்றாராம் துயரம் தள்ள!
உலகுக்கே அச்சாணி உழவர் என்றார்-அங்கோர்
உழவரைத் துச்சமாய் விலக்கிச் சென்றார்!
நிலவுக்கே சென்றாலும் பயனென் உண்டே-பசி
நீங்கிடச் செய்வது உழவன் தொண்டே!
இலவுக்குக் காத்தகிளி ஆவார் ஒருநாள்-அது
இன்றல்ல! என்றாலும் வருமே அந்நாள்!
பலகற்றும் கல்லாரே! அறிவார் நன்றே-அழி
பசிவர அனைத்தும் பறக்கும் அன்றே!
புலவர் சா இராமாநுசம்