Thursday, February 12, 2015

தேசத்தின் தந்தை நீரே –என்று தெரிந்தவர் எத்தனைப் பேரே!



உறவுகளே!
நேற்று, பாரதியசனதா ,அம்மையார், ஒருவர் அண்ணல் காந்தி பற்றிப் பேசிய , பேச்சைக் கேட்டு , ஏற்பட்ட வேதனையின் விளைவே
இக்கவிதை!!!!!!

தன்னலம் ஏதும் இன்றி- யாரும்
தன்கென நிகரும் இன்றி!
இன்னலே நாளும் கொண்டார் –காந்தி
இந்திய விடுதலைக் கண்டார்!
மன்னராய்ப் பலரும் இங்கே –பதவி
மகுடமே சூட எங்கே?
பொன்நிகர் விடுதலைக் காணோம்-அந்தோ
போயிற்று அனைத்தும் வீணாம்!


தேசத்தின் தந்தை நீரே –என்று
தெரிந்தவர் எத்தனைப் பேரே!
நாசத்தை நாளும் செய்தே –சொந்த
நலத்தையே பயனாய் எய்தே!
மோசத்தை, சட்டம் ஆக்கி –என்றும்
முடிவிலா வறுமை தேக்கி!
பேசத்தான் வழியே இல்லை! –எதிர்த்து
பேசிடின்! வருதல் தொல்லை

ஊற்றென ஊழல் ஒன்றே –இன்றே
உலவிட நாட்டில் நன்றே!
காற்றென வீசக் கண்டோம் –துயரக்
கண்ணீரால் கவிதை விண்டோம்
ஆற்றுவார் எவரும் உண்டோ! –தூய
அண்ணலே உமதுத் தொண்டோ!
போற்றுவார் எவரும் காணோம் –அந்தோ
போயிற்று அனைத்தும் வீணாம்

புலவர் சா இராமாநுசம்