Tuesday, December 29, 2015

நாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால் நடந்ததென்ன..?நாடறியும் இல்லைபலன் ஒன்றும்!



நாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால்
நடந்ததென்ன..?நாடறியும் இல்லைபலன் ஒன்றும்
தோள்தட்டி மார்தட்டி நடந்ததென்ன முடிவில்-இதில்
தோற்றதெவர் வென்றதெவர்! ஆயவதென்ன! விடிவில்!


கோடிகோடி கோடியென வரிப்பணமும் வீணே-ஏதும்
கொள்கையிலா கட்சிகளாய் இன்றிருத்தல் தானே
தேடிதேடி வீடுதோறும் வாக்குத்தர கேட்டார்-இன்று
தேம்பியழும் மக்கள்தானே நம்பியதைப் போட்டார்

பெரியதென்ன சிறியதென்ன ஊழல்தன்னில் அளவே-என
பேசுவதால் பலனுண்டா அத்தனையும் களவே
புரியாத மக்களென நினைத்துவிடில் தவறே-அதுவும்
புரிந்துவிடும் தேர்தல்வரின் உணர்திடுவர் அவரே

நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை
விலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்
விலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே

பதவிக்கே வந்துவிட்டால் பேசுவதும் ஒன்றாம்-பதவி
பறிபோனால் பேசுவதோ மாறான ஒன்றாம்
முதலுக்கே தேவையில்லா அரசியலும் தொழிலாம்- சற்று
முயன்றாலே போதுமவர் வாழ்வேநல் எழிலாம்

நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த
நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி
அல்லவர்கள் மீண்டும்வரின் இந்நிலையே என்றும்-இந்த
அவலந்தான் முடியாத தொடராக நின்றும்

புலவர் சா இராமாநுசம்

9 comments:

  1. நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-// வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் சுயநலமாகிவிட்ட சமூகத்திடமிருந்து இதை எதிர்பார்ப்பது கடினம் ஐயா!

    ReplyDelete
  2. மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்!
    மக்கள் வரிப் பணத்தை கரியாக்கி நம் முகத்தில் பூசுவார்!
    அரசியலில் இக்கரைக்கு அக்கரை பச்சை!
    சரியான சாடல், வேண்டும் மக்களுக்கு சரியான தேடல்!
    நன்றி அய்யா!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. நல்லவர்கள் வல்லவர்களை அறிவது கஷ்டம் ஒருவனுக்கு நல்லவன் வேறொருவனுக்குக் கெட்டவன் வல்லவனும் அது போலே. மன ஆதங்க வெளிப்பாடு

    ReplyDelete
  4. அருமையான வரிகள் ஐயா வரும் தேர்தலிலாவது மக்கள் புரிந்து வாக்களித்தல் வேண்டும்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  5. நல்லவர் என்று வருவாரோ
    தம +1

    ReplyDelete