Saturday, December 26, 2015

தங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி, தையின் குளிரோ எமைவாட்டும்!



பொங்கிய வெள்ள போயிற்றே-கண்ணீர்
பொங்கும் நிலைதான் ஆயிற்றே!
திங்கள் ஒன்றும் ஆகிறதே-இங்கே
தினமும் நெஞ்சம் வேகிறதே!
எங்கள் வாழ்வும் நலமுறுமா-மழை
இழைத்த அழிவும் வளமுறுமா?
தங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி,
தையின் குளிரோ எமைவாட்டும்!


புள்ளி விபரம் போடுகின்றார்-வந்து
போவதும் வருவதாய் ஒடுகின்றார்!
அள்ளிப் போடவும் மனமில்லை-ஐந்து
ஆயிரம் அளிப்பதால் பயனில்லை!
கொள்ளி வைக்கவே பயன்படுமே-எம்
குடும்பமே அதிலே எரிபடுமே!
வெள்ளம் வந்தால் வடிந்துவிடும்-துயர
வெள்ளத்தில் ஊரே மடிந்துவிடும்!

யானைப் பசிக்கு எதுவேண்டும்-அரசே
எமக்கு உதவ நி(ம)திவேண்டும்!
ஏனோ உடமைகள் இழந்திட்டோம்-வாழ
ஏதினி வழியின்றி அழிந்திட்டோம்!
விணே எம்மை வாட்டாதீர்-வெறும்
வார்த்தையால் திட்டம் தீட்டாதீர்!
தேனாய் இனித்திட வாழ்ந்தோமே-எட்டு
திசையும் இருண்டிட வீழ்ந்தோமே!

புலவர் சா இராமாநுசம்

12 comments:

  1. தற்போதைய சூழலுக்கு ஏற்ற கவிதை அருமை. உரியோர் உணர்ந்தால் சரி.

    ReplyDelete
  2. வேதனையான வரிகள் ஐயா மாற்றம் வரும் என்று நம்புவோம்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    காலம் உணர்ந்து கவிதை வடித்த விதம் சிறப்பு த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வெள்ளச் சேதம் அடையாதோரும் நிவாரண நிதி பெறுகின்றனராமே

    ReplyDelete
  5. உள்ளம் வேதனை அடைகிறது அய்யா.

    ReplyDelete
  6. இயற்கையின் இடர்பாட்டை இடித்துரைத்தீர் இயன்றவரை!
    இயன்றவரை முயலவேண்டும் இன்னலை போக்குதற்கு
    இயற்கையின் விளையாட்டு எவர் அறிவார்? ஏது புரிவார்?
    இன்றைய அரசோ! இனி வரும் அரசோ! இழந்ததை ஈடுசெய்ய
    இனியாவது துயர் துடைக்கட்டும்.
    "தங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி, தையின் குளிரோ எமைவாட்டும்!"
    உண்மை நிலையை படம் பிடித்து காட்டிய கவிதை!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  7. ஐயா வெள்ள நிவாரணம் குறித்தான கேள்விகள் எழக்கூடாது என்பதற்காகவே புதிய பிரச்சினைகளை எழுப்பி அதன் பின்னே பந்தய மாடு போல் பயணிக்கிறார்கள்...
    இவர்களாவது செய்வதாவது...?

    மக்களின் நிலையை படம் பிடித்துக் காட்டிய கவிதை.

    ReplyDelete
  8. வேதனை தரும் கவிதை. ஆனாலும் உண்மை.

    ReplyDelete