Friday, December 11, 2015

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணித் தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை



எங்கு காணிலும் குப்பையடா-நம்
எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
எடுத்துச் சொல்லியும் பலனில்லை


பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை தீரும் வழிகாண்பீர்-எனில்
வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணித்
தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது நோக்கமல-இது
குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
வேதனை விளைவாம் இதுசொல்ல

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே உடன்தேவை-மா
நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
செய்வீர் வேறு வழியில்லை!

புலவர் சா இராமாநுசம்

12 comments:

  1. அருமை ஐயா நல்லதொரு விண்ணப்பமே
    கருத்துடன் பொதிந்த பாமாலை நன்று
    நலம் வாழ்க..

    ReplyDelete
  2. இந்த சமயத்திற்கு தேவையான நல்ல அறிவுரை கவிதை வடிவில், நன்றி ஐயா.

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா

    சொல்லிய விதம் சிறப்பு ஐயா த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. விரைவில் செய்ய வேண்டும் ஐயா...

    ReplyDelete
  5. வருமுன்னர் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கெடும் என்பதை உணர்ந்தால் சரி :)

    ReplyDelete
  6. அருமையான கவிதை யா ஆவன செய்யட்டும் அதிகாரிகள்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. உடனே செய்யவேண்டியது...
    அருமையான பா ஐயா.

    ReplyDelete
  8. உடன் ஆற்றிட வேண்டிய பணியினை
    அருமையாய் உரைத்தீர் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  9. இப்போதைக்கு உடனடியாக ஆற்றிட வேண்டிய பணியே இது தான். நோய் எதிர்ப்புக்கு உடனே செய்ய வேண்டிய பணியும்......

    ReplyDelete
  10. இப்போதைய உடனடித் தேவையைத் தாங்கள் உணர்த்திய விதம் அருமை.

    ReplyDelete
  11. உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
    உணர்ந்தால் போதும் ஈண்டாமே

    சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete