Tuesday, December 1, 2015

அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!! இன்று????


அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!!
இன்று????

மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!


சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் நில்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!

உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!

வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயாப் பெருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!

புலவர் சா இராமாநுசம்

14 comments :

  1. வாவென்றாலும் வராது... நில் என்றாலும் நிற்காது..!

    ReplyDelete
  2. இயற்கையின் நியதி இது,

    தங்கள் கவி வரிகள் அருமை ஐயா,

    ReplyDelete
  3. பத்தினிப் பெண்கள் பெய்யென்றால் பெய்யுமாம் மழை. அது போல் அவர்கள் நில் என்று சொன்னால் நிற்குமோ மழை.

    ReplyDelete
  4. புலவர் அய்யா அவர்கள் 2012ல்
    வருணனுக்கு வடித்த "மழைப் பாடல்"
    தற்போது 2015ல் காதுக்கு எட்டியதோ என்னவோ?
    தங்களது வாக்குக்கு, வலிமை இருப்பினும்
    தோற்றத்திலே வெகு எளிமை!
    நன்றி அய்யா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  5. இயற்கையை எதுவும் செய்ய முடியாது ஐயா...

    ReplyDelete
  6. செயற்கை மழை வரவழைக்க தெரிந்த விஞ்ஞானத்திற்கு இயற்கை மழையை நிற்க வைக்க இயலுமா? அதுதான் இயற்கையின் சக்தி !!! இதை இந்த மானுடம் என்று உணருமோ அன்றே மனிதநேயம் தளைக்கும் இங்கே !!

    கவிதை அருமை ஐயா

    ReplyDelete
  7. வராவிட்டாலம் பிரச்சினை
    அதிகமாய் வந்தாலும் பிரச்சினை
    இயற்கையை வெல்ல யார் இருக்கிறார்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா
    அற்புதமான வரிகள் படித்து மகிழ்ந்தேன் த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. அன்புள்ள பெரும்புலவர் அய்யா,

    அன்று மழை வேண்டிப் பாடியது இன்று கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்க்கிறதோ?

    நன்றி.
    த.ம.7

    ReplyDelete
  10. கவிதை வரிகள் நன்று ஐயா
    தமிழ் மணம் 8

    ReplyDelete
  11. இதுக்கு மழைதான் பதில் சொல்லணும் :)

    ReplyDelete
  12. இதுக்கு மழைதான் பதில் சொல்லணும் :)

    ReplyDelete
  13. ஐயா வணக்கம்.

    வான் சிறப்புதான். வெறுப்பில்லை.

    இது மழையின் பிழையில்லை.

    மனிதப் பிழைதானே....!

    பாடல் வழக்கம்போலவே இயைபுடன் கூடிய இனிமையும் எளிமையுமாய்.....!

    அழகு.

    நன்றி.

    ReplyDelete
  14. வணக்கம் புலவர் ஐயா !

    அன்றும் இன்றும் மழைக்காய் எழுதிய கவிதைகள் சிறப்பாக இருக்கின்றன வேண்டுவதும் நாமே விரட்டுவதும் நாமே

    மிக அருமை ஐயா தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம +1

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...