Saturday, October 17, 2015

ஏழரை நாட்டுச் சனிபோல-இன்றும் ஏறின பெட்ரோல் விலைசால!


ஏழரை நாட்டுச் சனிபோல-இன்றும்
ஏறின பெட்ரோல் விலைசால!
ஏழைகள், நடுத்தர வர்க்கம்தான்-அவரே
என்றும் காண்பது நரகம்தான்!
வாழைக்கு கூற்றம் காய்போல-நாமே
வழங்கிய வாக்கும் அதுபோல!
கோழைகள் ஆனோம் பயனென்ன!?-இந்தக்
கொடுமைக்கு விடிவு இனியென்ன?


பால்விலை ஏறிற்று என்செய்தோம்-அதனால்
பதறியும் கதறியும் பயனுண்டா!
தோல்வியே என்றும் தொடர்கதையே-சுமையாம்
தோளொடு நடப்பது தலைவிதியே!
பேருந்து கட்டணம் ஏறிற்றே-மக்கள்
பேசியும் புலம்பியும் மாறிற்றா?
பேருந்து கண்டதும் ஓடுகின்றோம்-இடமே
பிடித்திட முயன்று தேடுகின்றோம்!

மின்விசைக் கட்டணம் விண்முட்ட-துயரம்
மேலும் தேளாய் நமைகொட்ட!
என்வினை இதுவோ என்றேங்கி-தினமே
இல்லறம் நடத்தக் கடன்வாங்கி!
தன்வினை ஆற்ற இயலாமல்-நாமும்
தவிப்போம் ஏதும் முயலாமல்!
பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீரே
போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!

புலவர் சா இராமாநுசம்

13 comments:

  1. விலைவாசி ஏற்றத்தினை கவிதையாக சவுக்கடி கொடுத்த விதம் அழகு ஐயா இருப்பினும் இதன் அடிப்படை தவறு தொடங்குவது மக்களிடம்தானே ஐயா
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. துளியேனும் சிந்திக்க வேண்டும் ஐயா...

    அருமை... நன்றி... வணக்கம்...

    ReplyDelete
  3. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால்தான் இது என்பது போன்ற தொனி தெரிகிறது யாரைத் தேர்ந்தெடுத்தாலும் இவற்றில் இருந்து மீள முடியுமா என்பது சந்தேகமே

    ReplyDelete
  4. GMB ஸார் கருத்துதான் எனக்கும்.

    ReplyDelete
  5. துளியேனும் சிந்திப்போம்
    அருமை ஐயா

    ReplyDelete
  6. யாரைத்தான் நம்புவதோ ஏழையின் நெஞ்சம் :)

    ReplyDelete
  7. எல்லா விலையும் ஏறிட்டேதான் இருக்கு.என்ன செய்ய
    அருமை

    ReplyDelete