Saturday, August 15, 2015

பாருக் குள்ளே நம்நாடே-புகழ் பாரதம்! உண்டா அதற்கீடே



பாருக் குள்ளே நம்நாடே-புகழ்
பாரதம்! உண்டா அதற்கீடே
ஊருக்கு ஊரே! கொடியேற்றி-இன்று
ஒருநாள் மட்டும் அதைப்போற்றி
பேருக்கு சுதந்திரத் திருநாளே-விழா
போற்றியே புகழ்ந்து மறுநாளே
யாருக்கும் நினைவில் வாராதே-இனி
என்றும் இந்நிலை மறாதே


வந்ததே சுதந்திரம் யாருக்காம்-நல்
வந்தே மாதரம் ஊருக்காம்
தந்தவன் சென்றான் ஆண்டுபல-அதை
தன்னல மிக்கோர் ஈண்டுசில
சொந்தமாய் தமக்கேப் போனதென-தினம்
செப்பும் நிலையே ஆனதென
நிந்தனை செய்து என்னபலன்-இந்த
நிலையை மாற்ற எவருமிலன்

வெள்ளையன் விட்டுச் சென்றாலும்-ஒரு
வேதனை தீர்ந்தது என்றாலும்
கொள்ளையர் சிலர்கை அகப்பட்டோ-நாளும்
கொடுமை அந்தோ மிகப்பட்டே
தொல்லைப் படுநிலை ஆயிற்றே-துன்பம்
தொடர்கதை யாகப் போயிற்றே
எல்லை மீறின் தன்னாலே-நாம்
இழப்போம் அனைத்தும் பின்னாலே

கொலையும் செய்ய சுதந்திரமே-பகல்
கொள்ளை அடிக்கவும் சுதந்திரமே
கள்ள வாணிகம் சுதந்திரமே-பொருள்
கலப்படம் செய்யவும் சுதந்திரமே
வெள்ளமே  ஊழல் அணைபோட-தூய
விடுதலை நோக்கி நடைபோட
நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
நாளில் வரமே தரவேண்டும்

11 comments:

  1. தேசத்தின் மீது கொண்ட ஆதங்கத்தால் ஒரு கவிதை தந்தீர்கள். நாட்டினை நல்லோர் ஆள வேண்டும் என்ற உங்கள் கனா பலிக்கட்டும்.

    அனைவருக்கும் எனது உளங்கனிந்த இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தங்களது கனவே எங்களது கனவும். சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உண்மை நிலையை உணச்சியும்டன் உணர்த்தியது கவிதை
    சுதந்திர தின வாழ்த்துகள் த.ம. 3

    ReplyDelete
  4. //நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
    நாளில் வரமே தரவேண்டும்//

    தங்களின் எண்ணம் நிறைவேறும் நாள் வரும் என நம்புவோம். அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நல்லோர் ஆள வேண்டும் அதுவே எல்லோர் ஆவலும்.
    சுதந்திர தின வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  6. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. இப்படி வெதும்பும் நாள் என்று மாறுமோ ,அன்றே உண்மை சுதந்திரம்;(

    ReplyDelete
  9. சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
    நாளில் வரமே தரவேண்டும்

    சுதந்திர நாள் வாழ்த்துக்கள் ஐயா
    தம +1

    ReplyDelete
  11. கனவு மெய்ப்பட வேண்டும்

    ReplyDelete