Monday, August 10, 2015

போக்கிடமே ஏதுமில்லா கோழை நாங்கள் –எண்ணி புலம்புவதா ? ஆவனவே செய்வீர் தாங்கள்!


சாக்கடையும் குடிநீரும் கலந்து வருதே-மனம்
சகிக்காத நாற்றமிகத் தொல்லை தருதே!
நீக்கிடவே முடியாத மேயர் ஐயா –உடன்
நேரில் ஆய்ந்து பாருங்கள் பொய்யா மெய்யா?
நோக்கிடுவிர் தொற்றுநோய் பரவும் முன்னே-மக்கள்
நொந்துமனம் வருந்திடவும் செய்வார் பின்னே!
போக்கிடமே ஏதுமில்லா கோழை நாங்கள் –எண்ணி
புலம்புவதா ? ஆவனவே செய்வீர் தாங்கள்!


மழைநீரின் வடிகால்வாய்  நகரில் முற்றும் –வடிவதிலே
மந்தகதி! இன்றும்! பயனில் சற்றும்!
அழையாத விருந்தினராய் கொசுவின் கூட்டம் –பெரும்
அலையலையாய் வந்தெம்மை தினமும் வாட்டும்!
பிழையேதும் செய்யவில்லை ஓட்டே போட்டோம் –உயிர்
பிழைப்பதற்கே யாதுவழி!? ஐயா கேட்டோம்!
கழையாடும் கூத்தாடி ஆட்டம் போன்றே –வாழ்வு
காற்றாடி ஆடுவதைக் காண்பீர் சான்றே!

நாள்தோறும் விலைவாசி நஞ்சாய் ஏற –ஒரு
நாள்போதல் யுகமாக எமக்கு மாற!
ஆள்வோர்க்கும் குறையொன்றும் எட்ட வில்லை-மேயர்
ஐயாவே நீரேனும் தீர்பீர் தொல்லை!
குடிநீரின் குறைதன்னை போக்க வேண்டும்–தீரா
கொசுத்தொல்லை! இல்லாமல் நீக்க யாண்டும்!
விடிவதனை எதிர்பார்த்து நாளும் காத்தேன் –இரவு
விழிமூட இயலாமல் கவிதை யாத்தேன்!

புலவர் சா இராமாநுசம்

18 comments:

  1. ஆள்வோர் காது... கேக்காது!

    ReplyDelete
  2. இப்போதைய மேயரை செயல்படா மேயர் என்று சொன்னால் சாலப்பொருத்தமாக இருக்கும் போலும்!

    ReplyDelete
  3. அனைத்து தொல்லைகளும் நீங்க வேண்டும்...

    ReplyDelete
  4. நல்லதே நட்குமென நம்புவோம் ஐயா
    ஐயா நலம்தானே ?
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  5. கொசு போன்ற தொல்லைகளால் உங்கள் மூலம் எங்களுக்கு ஒரு நல்ல கவிதை கிடைத்தது ஐயா. இருப்பினும் நல்லது விரைவில் நடக்குமென நம்புவோம்.

    ReplyDelete
  6. அய்யாவின் கோரிக்கை நிறை வேற வழியில்லை என்றே எனக்கு படுகிறது.....

    ReplyDelete
  7. கொசு குறையப் போவதில்லை,பாமழை நிற்கப் போவதில்லை!

    ReplyDelete
  8. விரைவில் சரி செய்ய வேண்டிய பிரச்சனை. சரி செய்வார்களா?

    ReplyDelete
  9. கொசுத் தொல்லையும் தருதே கவிதை என்று மேயரும் ரசித்துக் கொண்டிருக்காரா :)

    ReplyDelete