Saturday, June 6, 2015

மழையே மழையே வாராயோ-நீரும் மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?




மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!


சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் இல்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!

உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!


வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயா வருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!

புலவர் சா இராமாநுசம்

21 comments:

  1. அருமை ஐயா மழைக்கான பிராத்தனைக் கவிதை.
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. மழையே மழையே வாராயோ ?
    அழகான பாடல்.

    ReplyDelete

  3. புலவர்கள் பாட்டுக்கு சக்தி உண்டு என்பார்கள். தங்களது பாடல் மழையைக் கொணரும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  4. //உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
    உண்ண உணவும் கிடைக்காதே!
    அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
    அரக்க குணமே முற்றிவிடும்!//

    அருமை
    த ம 3

    ReplyDelete
  5. உங்கள் தமிழ் மழை பார்த்து வான் மழை வரட்டும்!

    ReplyDelete
  6. "... அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
    அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்! ..."
    அருமை ஐயா

    ReplyDelete
    Replies
    1. மருத்துவர் ஐயாவின் முதல் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  7. இப்போதைய தேவையை கவிதையாக்கித் தந்துள்ளீர்கள். கவிதைக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

    ReplyDelete
  8. #விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
    விழைவா ரிடமே பொய்கின்றாய்!#
    மழைத் தாயின் வஞ்சனை அறிந்து மலைத்து போனேன் :)

    ReplyDelete
  9. வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
    வகுத்த குறளுக்கு நிகரேது!--த.ம.8

    ReplyDelete
  10. வான் மழை பொழியட்டும் ஐயா
    நன்றி
    தம 10

    ReplyDelete
  11. வான் சிறப்புக் கூறும் உங்கள் தமிழ் சிறப்பு.

    தொடர்கிறேன் ஐயா!

    ReplyDelete
  12. அன்பு வலைப்பூ நண்பரே!
    நல்வணக்கம்!
    இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
    தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

    முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
    அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
    "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
    உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
    ஆம்!
    கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
    http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
    சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
    தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
    மற்றும்!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    Tm +1

    ReplyDelete