ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும்
அனைவர்க்கும் ஆனந்தம் தருக
ஏங்கியே ஏழைகள் வாழ – குடிசை
இல்லாமல் வளமனைச் சூழ
தாங்கிட அன்னாரை நீயும் –இன்பம்
தடையின்றிப் நிலையாக பாயும்
தீங்கின்றி கழியட்டும் ஆண்டே –மக்கள்
தேவைகள் நிறைவேற ஈண்டே
இயற்கையின் சீற்றங்கள் கண்டே –எங்கள்
இதயமும் உடைந்ததிவ் வாண்டே
செயற்கையால் வந்ததே அறிவோம் – இனி
செய்வதை ஆய்ந்துமே செய்வோம்
இயற்கையின் கோபத்தை நீக்க –எம்மின்
இன்னல்கள் இல்லாது போக்க
முயற்சியும் செய்வாய ஆண்டே – மக்கள்
முன்னேற தடையின்றி ஈண்டே
உழவனும் அழுகின்றான் இங்கே – அவன்
உழைத்தாலும் பலன்போதல் எங்கே
தழைத்ததா அவன்வாழ்வு இல்லை – தினம்
தவித்தவன் பெறுவதோ தொல்லை
பிழைத்திட பருவத்தில் மாரி – நீயும்
பெய்திடச் தருவாயா வாரி
செழித்திட உலகமே ஆண்டே –உடன்
செய்திட வேண்டினோம் ஈண்டே
இல்லாமை நீங்கிட வேண்டும் – ஏழை
இல்லாத நிலையென்றும் வேண்டும்
கல்லாதார் இல்லாமை வேண்டும் – கல்வி
கற்றாரை மதித்திட வேண்டும்
கொல்லமை விரதமாய் வேண்டும் –நற்
குணங்களும் வளர்ந்திட வேண்டும்
எல்லாரும் வாழ்ந்திட ஆண்டே –நீயும்
ஏற்றது செய்வாயா ஈண்டே!
புலவர் சா இராமாநுசம்