Saturday, November 1, 2014

அப்பாவி மீனவர்மேல் பொய்வழக்குப் போட்டே!



அப்பாவி மீனவர்மேல் பொய்வழக்குப் போட்டே-தண்டணை
அறிவித்தார் மரணமெனும் செய்திதனைக் கேட்டே!
இப்பாவை எழுதுகிறேன் தமிழினமே கேளாய்!- சுரணை
இருக்கிறதா நம்மிடையே ! இருப்பதென்ன வாளாய்!
துப்பாக்கி போல்நாமும் வெடித்திடவே வேண்டும்-என்றே
துடிக்கிறது என்மனமும்! யாதுபலன்! மீண்டும்!
தப்பான ஆட்சிதானோ! மத்தியிலே நடத்தல்!-எதையும்
தடுக்கின்ற உணர்வின்றி நாட்களையேன் கடத்தல்!


ஆளுக்கு ஒருகட்சி தலமையது என்றே!-தமிழ்
ஆர்வலரும் சிதறிவிடல் நன்றலவே! இன்றே
நாளுக்கு நாளிங்கே நலிவுதானே உற்றோம் –வடவர்
நாட்டாலே என்னபெரும் நன்மைதனைப் பெற்றோம்!
தோளுக்கு மேலேறி சிங்களவன் சிரிக்க-குன்றா
சோகத்தை நம்மவரோ நாள்தோறும் தரிக்க!
வாளுக்குக் கூர்மயங்கி மழுங்கிவிடல் போன்றே!- இன்றே
வாழ்கின்ற நம்வாழ்க்கை உரியதொரு சான்றே!

புலவர் சா இராமாநுசம்

Thursday, October 30, 2014

இனிய உறவுகளே! வணக்கம்!



     இனிய  உறவுகளே!  வணக்கம்!

                 தம்பி முத்துநிலவன் அவர்கள்  தன் வலையில், முகநூல்  பதிவுலகை
அழிக்கிறதா  என்ற  தலைப்பில்  ஓர்  ஆய்வுக்  கட்டுரை  எழுதியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்!  அவர் கேள்வி சரியானதே! முடிவில் அவர்  கொண்ட அச்சத்திற்கு, உரிய  முடிவும்(பதிலும்)அவரே , கூறியுள்ளது, மிகவும் நன்று!
           
              என்னுடைய  கருத்தும்  அதுவே!  கடந்த  திங்கள்  நானும் , என்னுடைய
மனதில் தோன்றிய அச்சத்தின்  காரணமாக ஒரு  கவிதையை( என்வலையில்)
எழுதி, என்  ஆதங்கத்தை அதில்  வெளிப்படுத்தியுள்ளேன்  பலரும், ( குறிப்பாக பதிவர்கள்) படிக்க  வேண்டும் என்பதற்காக, அக்கவிதையை , மீள் பதிவாக
மீண்டும் இங்கே வெளியிடுகிறேன்!

வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே,
வாராக் காரணம் தெரியவில்லை!-தாமரை,
இலையில் நீரென வருகின்றார்!- பதிவும்
இருப்பதாய் ஒப்புக்கு தருகின்றார்!- சிலர்
நிலையில் மாற்றம் நன்றல்ல!-காலம்
நிலையில் ! அறிவோம்! இன்றல்ல!-எனினும்,
வலையில் எழுதியே வளர்ந்தோமே !–அதை
வளர்த்திடும் பணியில் தளர்ந்தோமே!



நன்றி மறப்பது நன்றல்ல-நமக்கே
நவின்றது வள்ளுவன் இன்றல்ல!-முகநூல்
சென்றது  ஏதும் தவறல்ல-கருத்தைச்
செப்பிட அதுவும் வேறல்ல!-ஆனால்
நின்றது வலைவழி வருவதுமே-என
நினைத்திட, பதிவிதும் தருவதுமே!-கடன்
என்றதே என்னுள் மனசாட்சி-அதனால்
எழுதினேன்! வந்திடல், மிகமாட்சி!

புலவர் சா இராமாநுசம்