அப்பாவி மீனவர்மேல் பொய்வழக்குப் போட்டே-தண்டணை
அறிவித்தார் மரணமெனும் செய்திதனைக் கேட்டே!
இப்பாவை எழுதுகிறேன் தமிழினமே கேளாய்!- சுரணை
இருக்கிறதா நம்மிடையே ! இருப்பதென்ன வாளாய்!
துப்பாக்கி போல்நாமும் வெடித்திடவே வேண்டும்-என்றே
துடிக்கிறது என்மனமும்! யாதுபலன்! மீண்டும்!
தப்பான ஆட்சிதானோ! மத்தியிலே நடத்தல்!-எதையும்
தடுக்கின்ற உணர்வின்றி நாட்களையேன் கடத்தல்!
ஆளுக்கு ஒருகட்சி தலமையது என்றே!-தமிழ்
ஆர்வலரும் சிதறிவிடல் நன்றலவே! இன்றே
நாளுக்கு நாளிங்கே நலிவுதானே உற்றோம் –வடவர்
நாட்டாலே என்னபெரும் நன்மைதனைப் பெற்றோம்!
தோளுக்கு மேலேறி சிங்களவன் சிரிக்க-குன்றா
சோகத்தை நம்மவரோ நாள்தோறும் தரிக்க!
வாளுக்குக் கூர்மயங்கி மழுங்கிவிடல் போன்றே!- இன்றே
வாழ்கின்ற நம்வாழ்க்கை உரியதொரு சான்றே!
புலவர் சா இராமாநுசம்