Saturday, September 20, 2014

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை! வேங்கடவன் துதி!


உறவுகளே!
இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை! வேங்கடவன் துதி! என்
துணைவியின் வேண்டுகோளுக்கிணங்க அன்று பாடியது!

சூழும் இடர்தன்னை சுடர்கண்ட பனியாக்கும்
ஏழுமலை யானே எனையாளும் பெருமாளே
வாழும் நாளெல்லாம் உனைவணங்கி நான்வாழ
பாழும் மனந்தன்னை பதப்படுத்த வேண்டுகிறேன்


அன்னை அலர்மேலு அகிலாண்ட நாயகியே
பொன்னை வேண்டியல்ல பொருளை வேண்டியல்ல
உன்னை வணங்குதற்கே உயிர்வாழ விரும்புகின்றேன்
என்னை ஆட்கொள்வாய் எனையாளும் தாயேநீ

பஞ்சுப் பொதிபோல பரவி வருகின்ற
மஞ்சு தவழ்ஏழு மலையானே கோவிந்தா
தஞ்சம் நீயென்றே தலைவணங்கும் என்போன்றார்
நெஞ்சில் நீங்காது நிலைத்திருக்க வேண்டுகிறேன்

வாழிவாழி யென வானோர்கள் கூத்தாட
ஆழிகடைந் தமுது அளித்தவனே மங்கையர்கள்
தாழிகடைந் தெடுத்த தயிர்வெண்ணை திருடியவர்
தோழி பலர்துரத்த தொடர்ந்தோடி ஒளிந்தவனே

தத்தம் குறையெல்லாம் தடையின்றி நீங்குமென
நித்தம் உனைநாடி நீள்வரிசை தனில்நின்று
சித்தம் மகிழ்வுடனே செப்புகின்ற கோவிந்தா
சத்தம் உன்செவியில் சங்கொலியாய் கேட்கிறதா

வெண்ணை உண்டவாய் விரிய வியனுலகு
தன்னைக் கண்டதாய் தடுமாறி மகிழ்ந்தாட
மண்ணை அளந்தவனே மாபலியின் தலையோடு
விண்ணை அளந்தவனே விமலனே வணங்குகிறேன்

மலையில் வாழ்பவனே மலையை நீதூக்கி
தலையின் மேல்வைத்தே ஆவினத்தை காத்தவனே
அலையில் கடல்மீது ஆனந்தப் பள்ளியென
இலையில் துயின்றவனே இறைவாநான் தொழுகின்றேன்

ஆதிமூல மென்ற அபயக்குரல் வந்துன்
காதில் விழச்சென்று காத்தவனே கோவிந்தா
வீதிதனில் வருவாய் வீழ்ந்து வணங்கிடுவார்
தீதுதனை முற்றும் தீர்த்திடுவாய் கோவிந்தா

எங்கும் உன்நாமம் எதிலும் உன் நாமம்
பொங்கும் உணர்வெல்லாம் போற்றும் திருநாமம்
தங்கும் மனதினிலே தடையின்றி உன்நாமம்
பங்கம் அடையாமல் பாஞ்சாலி காத்ததன்றோ

அம்மை அலர்மேலு அப்பன் திருமலையான்
தம்மை நாள்தோறும் தவறாமல் வணங்கிவரின்
இம்மை மறுமையென எழுபிறவி எடுத்தாலும்
உம்மை மறந்தென்றும் உயிர்வாழ இயலாதே

பாடி முடித்திவிட பரந்தாமா உன்அருளை
நாடி வருகின்றேன் நாயகனே வேங்கடவ
தேடி வருவார்கு திருமலையில் உனைக்காண
கோடிக் கண்வேண்டும் கொடுப்பாயா பரந்தாமா

முற்றும் உன்புகழை முறையாக நான்பாட
கற்றும் பல்லாண்டு காணாது தவிக்கின்றேன்
பற்றும் அற்றவரும் படைக்கின்ற பிரம்மாவும்
சற்றும் அறியாருன் திருவடியும் திருமுடியும்

வேதத்தின் வித்தேயுன் விளையாட்டை யாரறிவார்
நாதத்தின் சத்தேயுன் நாடகத்தை யாரறிவார்
பேதத்தை கொண்டவுள்ளம் பெருமாளே என்போன்றார்
சோகத்தை நீக்குமென சொல்லியிதை முடிக்கின்றேன்

தாங்கும் நிலையில்லா தடைபலவே வந்தாலும்
நீங்கும் படிசெய்யும் நிமலனே நாள்தோறும்
தூங்கும் முன்வணங்கி தூங்கி எழவணங்கும்
வேங்கி தாசன்நான் விடுக்கின்ற விண்ணப்பம்

செல்லும் திசைமாறி சென்றுவிடும் கப்பலென
அல்லும் பகலுமென் அலைகின்ற உள்ளத்தை
கொல்லும் அரவின்மேல் கொலுவிருக்கும் கோவிந்தா
ஒல்லும் வழியெல்லாம் உனைவணங்கச் செய்திடுவாய்

புலவர் சா இராமாநுசம்

Friday, September 19, 2014

இந்தியா என்பதோர் நாடே-என்ற எண்ணத்தில் வந்ததிக் கேடே!



உறவுகளே! இந்தித் திணிப்பு! எதிர்ப்பு! திரும்பப் பெறுதல்! செய்தி!இன்று!
எனக்குப் பழைய நினைவுகள்!

அன்று, நான் எழுதியது, இதோ !
அறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டு அவர் நடத்திய
திராவிட நாடு இதழின் முதல் பக்கத்தில் வெளிவந்த கவிதை! இது, இரண்டாம் முறை இந்தி நுழைய முயன்ற போது
எழுதியது! ஏறத்தாழ, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்!


இந்தியா என்பதோர் நாடே-என்ற
எண்ணத்தில் வந்ததிக் கேடே
நந்தமிழ் எழில்மிகு வீடே-இந்தி
நலம்தரா மாகள்ளிக் காடே
வந்தது இன்றெனில் ஓடே-இந்தி
வருகின்ற வழியெலாம் மூடே
பந்தென அதையெண்ணி ஆடே-இந்தி
பறந்திட வடக்கினைச் சாடே!


பள்ளியில் கட்டாயம் வேண்டும்-என்ற
பல்லவி கேட்குது மீண்டும்
துள்ளி எழுந்துமே ஈண்டும்-இந்தி
தொலைந்திட செய்வோமே யாண்டும்
கொள்ளியை எடுத்தெவர் உலையில்-அதை
கொண்டுமே வைப்பாரா தலையில்
எள்ளியே நகைக்காதோ நாடே-இந்தி
ஏற்பது தமிழுக்குக் கேடே!

தாண்டவ மாடுது இந்தி-அஞ்சல்
தலைகளில் சொகுசாகக் குந்தி
வேண்டாதப் பொதுமொழி இந்தி-அதை
விரட்டுவோம் அனைவரும் முந்தி
ஈண்டெவர் மரித்திட வரினும்-அதை
எத்தனை வகைகளில் தரினும்
மாண்டவர் பிழைத்திடப் போமோ-இந்தி
மறுமுறை நூழைந்திட ஆமோ!?

புலவர் சா இராமாநுசம்

Thursday, September 18, 2014

கத்தும் கடலலையாய்- ஓயா கரைமோதும் சிற்றலையாய்



கத்தும் கடலலையாய்- ஓயா
கரைமோதும் சிற்றலையாய்
தத்தும் குழந்தையென- வானில்
தவழ்கின்ற மேகமென
நித்தம் ஒருகவிதை-என்றும்
நிலையாக எழுதிவிட
சித்தம் இருந்தாலும் –முதுமை
செயல்படுத்த விடவில்லை


புலவர் சா இராமாநுசம்

Tuesday, September 16, 2014

தெம்புடனே கட்சிகளை திரட்டி உடனே –ஏற்ற தெளிவுடனே முடிவெடுத்தல் உமது கடனே!



வம்புதர பாகிஸ்தான் மேலும் ஒன்றே –சீனா
வருகிறது துணைபோல நினைக்க இன்றே-எனவே
தும்புவுட்டு வால்பிடிக்க முயல வேண்டாம்-இதுவே
தொடர்கதையாய் ஆகிவிடின் துயரே ஈண்டாம்!-வீணில்
அம்புதனை நோவதிலே பயனே இல்லை-மத்தியில்
ஆள்வோரே! ஆய்வீரே! இதற்கோர் எல்லை!- ஆக
தெம்புடனே கட்சிகளை திரட்டி உடனே –ஏற்ற
தெளிவுடனே முடிவெடுத்தல் உமது கடனே!


புலவர் சா இராமாநுசம்

Monday, September 15, 2014

அண்ணாவின் பிறந்தநாள் ஆகு மின்றே- இங்கே அனைவருமே மாலையிட்டு வணங்க நன்றே!



அண்ணாவின் பிறந்தநாள் ஆகு மின்றே- இங்கே
அனைவருமே மாலையிட்டு வணங்க நன்றே
கண்ணான அவர்கொள்கை காற்றில் போக-பலரும்
கைகழுவி விட்டதுவே உண்மை யாக!

ஒன்றேதான் குலமென்று உரைத்த பின்னும்- உலகில்
ஒருவன்தான் தேவனென உரைக்க, இன்னும்
இன்றேதான் நிலையென்ன பாரு மிங்கே – பதில்
எவரேனும் சொல்வாரா கூறு மிங்கே!

வெற்றுக்கே ஆரவாரம் நடத்து கின்றார் –பகல்
வேடமிட்டே வாழ்நாளைக் கடத்து கின்றார்
உற்றுத்தான் நோக்குவார் அறிந்த உண்மை!-இதனால்
உண்டாகா ஒருநாளும் உரிய நன்மை!

புலவர் சா இராமாநுசம்