Thursday, July 24, 2014

மலராத மொட்டுகளை கசக்கி முகரும் –எவரும் மாபாவி! மனநோயர்! என்றே பகரும்!



பத்துவயதுக்கு உட்பட்ட சிறுமி தம்மை –நாளும்
பாலியல் பலத்காரம் செய்யும் உம்மை!
கொத்துகறி போட்டாலும் தவறே இல்லை-காமக்
கொடுயோர்க்கு தண்டணை! அதுவே எல்லை!

மலராத மொட்டுகளை கசக்கி முகரும் –எவரும்
மாபாவி! மனநோயர்! என்றே பகரும்!
புலராத விடியல்போல் இருளே சூழும்-அந்த
புண்பட்ட இளங்குறுத்து எவ்வண் வாழும்!

காமுகரே! காமுகரே! வேண்டாம் கொடுமை –வாழும்
காலம்வரை வருந்துகின்ற பழியாம்! மடமை!
ஆமிதுவே! அறிவீரே! திருந்தப் பாரீர்-பெற்ற
அன்னையவள் பெண்தானே ! எண்ணிக் காரீர்!

செய்தித்தாள் செப்புவது நாளும் இதையே- என்ன
செய்வதெனத் தெரியாமல் திகைத்தல் விதியே!
உய்தித்தான் வந்திடுமா….? ஏங்கும் உள்ளம்- மனித
உருவத்தில் மிருகமா….? துயரே கொள்ளும்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, July 22, 2014

பழையகள்ளு புதியமொந்தை ஆன தென்றே –இன்று பாராள வந்தோரின் செயலும் ஒன்றே!



பழையகள்ளு புதியமொந்தை ஆன தென்றே –இன்று
பாராள வந்தோரின் செயலும் ஒன்றே
பிழையை நீக்கி நன்மைதர முயலவில்லை-எதிர்த்து
பேசுதற்கும் நாதியுண்டா! அதுதான் தொல்லை

வாக்குறுதி தந்த தெல்லாம் வெற்றுச் சொல்லே-ஏழை
வாழ்வதற்கு யார்வரினும் வாழியே இல்லே
நாக்குறுதி இல்லாதார் நாடகம் தானே-இங்கே
நடக்கிறது நாள்தோறும் வருந்தல் வீணே

ஆளுக்கொரு கருத்தென்று அமைச்சர்  சொல்ல-மோடி
அரசாங்கக் கட்டுப்பாடும் தளரும் மெல்ல
நாளுக்கொரு விளக்கமதில் ! நன்மையல்ல ஐயா –சற்று
நாவடக்கம் வேண்டும்! ஆய்வீர்! மெய்யா

விலைவாசி குறைவதற்கு ஏற்றவழி காண்பீர் –நாட்டில்
வீணாகும் நதிநீரை தடுக்கவழி பூண்பீர்!
தலையாய திட்டங்களை முன்னெடுத்து வருவீர் –மொழித்
தகராறு தலைதூக்கா உறுதிமொழி தருவீர்!

புலவர் சா இராமாநுசம்