Thursday, July 3, 2014

அன்றும் இன்றும் ஒன்றே! அறிவோம் நாமும் நன்றே!


உறவுகளே!
11-3-2013 , அன்று நான் கச்சத்தீவு பற்றி எழுதிய கவிதையே
இதுவாகும் இன்றும் அது பொருந்துவதைப் பாருங்கள்!

மனித நேயம் இல்லையா
மத்திய அரசே சொல்லையா?

தினமேத் தொல்லைப் படுகின்றான்
தேம்பியே மீனவன் கெடுகின்றான்
மனமே இரங்க வில்லையா
மனதில் அரக்கனா சொல்லையா!

சுண்டைக் காய்போல் அந்நாடே
சொன்னால் வெட்கம் பெருங்கேடே
அண்டையில் இருந்தேத் தரும்தொல்லை
அளவா? அந்தோ துயரெல்லை!

கச்சத் தீவைக் கொடுத்தீரே!
காரணம் எதுவோ ?கெடுத்தீரே!
அச்சப் பட்டே மீனவனும்
அல்லல் படுவதைக் காண்பீரே!

படகொடுப் பிடித்தே மீனவரைப்
பாழும் சிறையில் தள்ளுகின்றான்!
இடமிலை மீனவர் உயிர்வாழ
எண்ணமும் உமக்கிலை அவர்வாழ!

மாநில அரசையும் மதிப்பதில்லை!
மத்திய அரசுக்கோ செவியில்லை!
நாமினி செய்வதை ஆய்வோமா?
நல்லது நடப்பின் உய்வோமா?

கடிதம் எழுதினால் போதாதே
காரியம் அதனால் ஆகாதே!
முடிவது எதுவென எடுப்பீரா
முடங்கிட மீனவர் விடுப்பீரா?

அலைகடல் தானே அவன்வீடாம்
அந்தோ! இன்றது சுடுகாடாம்!
நிலைமை அப்படிப் போகுமன்றோ
நிம்மதி, அமைதி ஏகுமன்றோ?

புலவர் சா இராமாநுசம்

Monday, June 30, 2014

அன்பின் இனிய உறவுகளே!



அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்! நலமா
கடந்த பத்து தினங்களுக்கு மேலாக இரத்தக் கொதிப்பு அதிகரித்து
சில நாட்கள் மருத்துவ மனையில் ஓய்வெடுக்க நேரிட்டதால் முகநூல்,வலை பக்கம் வரவோ பதிவுகளைப் படிக்கவோ இயலவில்லை
தற்போது, சற்று நலமே!


புலவர்   சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...