Friday, May 2, 2014

யார்செய்தார் ஐயகோ! மாறா சதியோ !-சுவாதி இறந்தாளே! எண்ணுவீர்! அவள்தன் விதியோ!


யார்செய்தார் ஐயகோ! மாறா சதியோ !-சுவாதி
இறந்தாளே! எண்ணுவீர்! அவள்தன் விதியோ!
நேர்செய்ய இயலாத இழப்பாம் அன்றோ- உயிர்
நீங்கிட , கயவர்களே இதுதான் நன்றோ!

வடிகின்ற கண்ணீரோ இரத்தம் ஆக –எப்படி
வாழ்வாராம் பெற்றோரும் துயரம் போக!
வெடிகுண்டு வைத்ததே! கயவர் கூட்டம்-மத
வெறியர்களே ஓயாதா உமது ஆட்டம்!

செடியொன்று மலராமல் கருக லாமா– அந்தோ!
செய்தாரே! இதுமேலும் தொடர லாமா!
மடியின்றி விரைவாக செயல்பட வேண்டும்-மக்கள்
மனதினில் பயமின்றி வாழந்திட ஈண்டும்!

நாள்தோறும் கொலைகொள்ளை! போதாது என்றா-தலை
நகரத்தில் வெடித்தது! வெடிகுண்டு நன்றா!
தேள்போல கொட்டுதே! நெஞ்சத்தில் துயரே-போனால்
திரும்பாத ஒன்றலாவா! வாழ்கின்ற உயிரே!

தூங்காமை துணிவுடமை இரண்டும் இன்றே- அரசு
தொய்வின்றி செயலாற்ற வேண்டும் ஒன்றே!
நீங்காமை வேண்டுமென அய்யன் சொன்னார்-நீதி
நிலைத்திட செய்வீரா!? அடங்க ஒன்னார்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, May 1, 2014

மேதினி போற்றிடும் மேதினமே –உன் மேன்மைக்கே இணைகாணா எம்மனமே!





மேதினி போற்றிடும்  மேதினமே –உன்
  மேன்மைக்கே இணைகாணா  எம்மனமே!
நீதியில்  முதலாளி  ஆட்டமெல்லாம்-என்றும்
   நீங்கிட  வைத்தாயே திட்டமெல்லாம்
வீதியில்  வருகின்றார்  ஆடிப்பாடி –பெற்ற
  விடுதலை ஓங்கிட  உரிமைநாடி
பீதியில் வாழ்வென்றே  வாழுகின்றார்- ஏதும்
   பேதமில்  ஒன்றென  சூழுகின்றார்

உழைப்பவர்  அனைவரும்  ஒற்றுமையாய் –இந்த
   உலகினில்  உரிமையே  பெற்றவராய்
தழைப்பது  உன்னாலே  மேதினமே –சொல்ல
   தன்னிகர் இல்லாத  இத்தினமே
பிழைப்பது எவ்வழி  அறியாமலே – எதிர்த்து,
    பேசிட துணிவும்  தெரியாமலே
அழைப்பது ஆண்டான் அடிமையென –இருந்த
   ஆணவம் நீக்கினாய்  கொடுமையென

புலவர்  சா  இராமாநுசம்
  

Tuesday, April 29, 2014

உள்ளத்தில் எழுகின்ற எண்ணம் தாமே –திரண்டு உருவாக, கருவாகி, கவிதை ஆமே!



மறவாது  எழுதுவேன்!  மரபில்  கவிதை –என்
    மனமென்னும் தோட்டத்தில், போட்டீர்  விதையே!
இறவாது  வாழ்வது  அதுதான்  என்றே –பலர்
     இயம்பிட, உள்ளத்தில்  ஏற்றேன்  இன்றே!
தரமாக  தந்திட  முயல்வேன்  நானே –அன்னை
     தமிழ்தானே  நமக்கெல்லாம்  திகட்டாத்  தேனே!
வரமாக வழங்கினீர்  மறுமொழி  தம்மை – என்னை
     வாழ்திட,,! வளர்ந்திட,! வணங்குவேன்  உம்மை!

உள்ளத்தில்  எழுகின்ற  எண்ணம் தாமே –திரண்டு
     உருவாக, கருவாகி, கவிதை  ஆமே!
பள்ளத்தில் வீழ்ந்திட்ட  நீர்போல்  தேங்கி–பின்னர்
     பாய்கின்ற நிலைபோல  நெஞ்சினில்  தாங்கிக்,
கொள்ளத்தான்  எழுதிட முயல்வேன் !மேலும் –அதில்
      குறைகண்டே  சொன்னாலும்  திருத்தி,  நாளும்!
எள்ளத்தான்  சொன்னாலும் வருந்த  மாட்டேன் – மேலும்
      எவர்மனமும்  புண்பட  கவிதைத்  தீட்டேன்!

தனிமைமிகு  இருள்தன்னில்  தவிக்க லானேன் –முதுமை
       தளர்வுதர  அதனாலே முடங்கிப்  போனேன்!
இனிமைமிகு  உறவுகளே  நீங்கள்  வந்தீர் – நானும்
       இளமைபெற  மறுமொழிகள்  வாரித்  தந்தீர்!
பனிவிலக  வெம்மைதரும் கதிரோன்  போன்றே –எனைப்
       பற்றிநின்ற  துயர்படலம்  விலகித்  தோன்ற!
நனியெனவே  நலமிகவே  துணையாய்  நின்றீர் – வாழ்
        நாள்முழுதும்  வணங்கிடவே  என்னை  வென்றீர்!
 புலவர் சா இராமாநுசம்
 (மீள்பதிவு)