யார்செய்தார் ஐயகோ! மாறா சதியோ !-சுவாதி
இறந்தாளே! எண்ணுவீர்! அவள்தன் விதியோ!
நேர்செய்ய இயலாத இழப்பாம் அன்றோ- உயிர்
நீங்கிட , கயவர்களே இதுதான் நன்றோ!
வடிகின்ற கண்ணீரோ இரத்தம் ஆக –எப்படி
வாழ்வாராம் பெற்றோரும் துயரம் போக!
வெடிகுண்டு வைத்ததே! கயவர் கூட்டம்-மத
வெறியர்களே ஓயாதா உமது ஆட்டம்!
செடியொன்று மலராமல் கருக லாமா– அந்தோ!
செய்தாரே! இதுமேலும் தொடர லாமா!
மடியின்றி விரைவாக செயல்பட வேண்டும்-மக்கள்
மனதினில் பயமின்றி வாழந்திட ஈண்டும்!
நாள்தோறும் கொலைகொள்ளை! போதாது என்றா-தலை
நகரத்தில் வெடித்தது! வெடிகுண்டு நன்றா!
தேள்போல கொட்டுதே! நெஞ்சத்தில் துயரே-போனால்
திரும்பாத ஒன்றலாவா! வாழ்கின்ற உயிரே!
தூங்காமை துணிவுடமை இரண்டும் இன்றே- அரசு
தொய்வின்றி செயலாற்ற வேண்டும் ஒன்றே!
நீங்காமை வேண்டுமென அய்யன் சொன்னார்-நீதி
நிலைத்திட செய்வீரா!? அடங்க ஒன்னார்!
புலவர் சா இராமாநுசம்