கற்றாரோ கல்லாரோ கவலை! இல்லை-மிக
கவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை!
உற்றாரா உறவினரா எண்ணல் வேண்டாம்-நம்
உரிமைதனை ஆய்தேதான் அளிப்பீர் ஈண்டாம்!
கடந்திட்ட காலமதை எண்ணிப் பாரிர்-அதில்
கண்டபலன் என்னவென ,நன்கு ஓரிர்!
நடந்திட்ட தீமைபல! காரணம் யாரே! –மேலும்
நடப்பதற்கு வழிவிட்டால் அழியும் ஊரே!
எரிகின்ற கொள்ளியிலே எந்தக் கொள்ளி –ஐயா
ஏற்றதென கேட்போரே! தெளிவாய் உள்ளி!
புரிகின்ற ,அவர்செயலை கருத்தில் கொண்டே –ஓட்டு
போடுவதே நாட்டுக்குச் செய்யும் தொண்டே!
இன்னாரை ஆதரிக்க வேண்டு மென்றே –இங்கே
எழுதுவது என்வரையில் தவறாம் ஓன்றே!
ஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அது
உம்முடைய ,உரிமையென சொல்வேன் மீண்டும்!
புலவர் சா இராமாநுசம்