Thursday, April 3, 2014

கல்லாரைக் கற்றோராய் ஆக்கலினிது-மூடக் கயவரைக் கண்டாலே விலகலினிது!


எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது-நல்
   இல்லறம் ஒன்றேதான் என்றுமினிது!
பெண்மையை மதித்தலே உலகிலினிது-ஏதும்
   பிழையின்றி பேசலே மொழிக்கினிது!
கண்ணியம் காத்தலே மாந்தர்க்கினிது-கல்வி
   கற்றாரைக் காமுற்று காணலினிது!
புண்ணியம் தேடலே வாழ்விலினிது-செய்யும்
   பொதுவாழ்வு தன்னிலே நேர்மையினிது!


கொல்லாமை விரதாமாய்க் கொள்ளலினிது-நல்
    கொள்கையின் வழிநாடி நடத்தலினிது!
இல்லாமை நோயின்றி இருத்தலினிது-தம்
    இயல்பாலே காண்போரைக் கவர்தலினிது!
சொல்லாமை பொய்தன்னை அறத்திலினிது-எதுவும்
    சொந்தமெனச் சொல்வதை மறத்தலினிது!
கல்லாரைக் கற்றோராய் ஆக்கலினிது-மூடக்
    கயவரைக் கண்டாலே விலகலினிது!


பாராட்டி பகைவரை பேசலினிது-அப்
     பகைமையும் அதனாலே நீங்கலினிது!
ஊரோடு ஒத்துமே போதலினிது-தம்
     உறவோடு ஒற்றுமையே ஆதலினிது!
வேரோடு முள்தன்னைக் களைதலினிது-நல்
    வேந்தன்கீழ் வாழ்தலே மாந்தர்க்கினிது!
சீரோடு இதுபோலப் பலவுமினிது-எடுத்துச்
     செப்பிட ஆனாலும் போதுமினி(யி)து!

                    புலவர் சா இராமாநுசம்


Monday, March 31, 2014

செய்வீரா ! நீங்கள் செய்வீரா! -செய்து உய்வீரா நீங்கள் உய்வீரா!



செய்வீரா ! நீங்கள் செய்வீரா! -செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

வருகின்ற தேர்தலில்
தருகின்ற வாக்கினை-ஆய்ந்து
தருவீரா நீங்கள் தருவீரா!
புரிவீரா நீங்கள் புரிவீரா -இனி

செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

ஏமாற்ற இலவசம்
என்பதே! உணர்ந்துடன் –பதவி
தாமற்ற தருவதே உணர்வீரா!
நாமற்ற யாதென உணர்வீரா- உடன்

செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

தரமில்லா கூட்டணி
தகவில்லா காட்சிகள் நமக்கு
வரமல்ல! சாபமே அறிவீரா!
நிறம்மாறும் பச்சேந்தி! புரிவீரா!-என

செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!


புலவர் சா  இராமாநுசம்