Saturday, March 22, 2014

அரசியல் நமக்கு அவசியமே!(அருணாவின் விருப்பம் ! நிறைவேற, பாடிய பாடல்)



அரசியல் நமக்கு  அவசியமே !-நல்லோர்
    ஆட்சிக்கு  வருவதும் அவசியமே!
பரம்பரை நீங்குதல் அவசியமே! –பதவி
    பண்புளார்  தாங்குதல்  அவசியமே!

மன்னர் ஆட்சி முடிந்தாலும் –நல்
    மக்கள் ஆட்சி  மலர்ந்தாலும்
என்ன பலன்தான் கண்டோமே –இன்னும்
   ஏழைகள் அதிகமாய்  கொண்டோமே!

பாலும் தேனும் தெருவெங்கும் –விரைந்து
   பாய நாட்டில் வளமோங்கும்!
நாளும் சொல்லியே நம்பவைத்தார் –ஆனால்
   நாடாளச் சென்றவர் வெம்பவைத்தார்!
வீதிக்கு  நடுவில்  மதுக்கடையே –பெண்கள்
    வீதியில்  நடப்பர்  பயத்திடையே!
நீதிக்கும் நேர்மைக்கும்   இடமில்லை! –கொள்ளை
    நிகழா நாளோ  ஏதுமில்லை!

குற்றம்  ஆள்வோர் மட்டுமல்ல –இலஞ்சம்
    கொடுக்கா மனிதர்  யார்சொல்ல
உற்றே நோக்கின்  நம்மைநாம் –நன்கு
    உள்ளம் காட்டும் உண்மைதனை

      புலவர்  சா  இராமாநுசம்
   

Friday, March 21, 2014

என்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த இறைவனை எண்ணி நிந்தித்தேன்!


     சின்னப் பையன் வருவானே-தினம்
           செய்தித் தாளும் தருவானே!
     சன்னல் வழியும் எறிவானே –கதவுச்
           சாத்திட குரலும் தருவானே!
     இன்னல் ஏழையாய் பிறந்ததுவா-பிஞ்சு
           இளமைக்கு அந்தோ சிறப்பிதுவா!
     என்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த
           இறைவனை எண்ணி நிந்தித்தேன்!

    பள்ளிச் செல்லும் வயதன்றோ-தினம்
           பாடம் படிக்கும் வயதன்றோ!
    துள்ளி ஆடும் வயதன்றோ-தோழன்
           துரத்த ஓடும் வயதன்றோ!
     அள்ளிய செய்தித் தாளோடும்-நஞ்சி
           அறுத்த செருப்புக் காலோடும்!
    தள்ளியே சைக்கிளை வருவானே-நேரம்
           தவறின் திட்டும் பெறுவானே!

     சட்டம்  போட்டும் பயன்தருமா-கல்வி,
           சமச்சீர் ஆகும் நிலைவருமா!
     இட்டம் போல நடக்கின்றார்-இங்கே
           ஏழைகள் முடங்கியே கிடக்கின்றார்!
     திட்டம் மட்டுமே போடுகின்றார்-தம்
           தேவைக்கும் அதிலே தேடுகின்றார்!
     கொட்டம் போடும் அரசியலே-எங்கும்
           கொடிகட்டிப்  பறக்குது! நாதியிலே!

     இமயம் முதலாய் குமரிவரை-எங்கும்
           இருந்திட வேண்டும் ஒரேமுறை!
     நம்மைஆள தேர்தல்முறை-இன்று
           நடைமுறைப் படுத்தும் அந்தமுறை!
     அமைய குரலும் விடுப்பீரே-கல்வி
           ஆணையம் அமைத்து கொடுப்பீரே!
     சமயம் இதுவே முயன்றிடுவீர்-உயர்
           சமச்சீர் கல்வி பயின்றிடுவீர்!

             புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, March 19, 2014

கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே!



கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி
கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே!
ஓட்டினி கேட்டவர் வந்திடுவார் –மேலும்
ஒருசிலர் நோட்டினைத் தந்திடுவார்!
ஆட்டமே களைகட்டும்! பாருமிங்கே- நடக்கும்
அரசியல் வேடிக்கை! ஊதசங்கே!
நாட்டையே மேன்மேலும் நாசமாக்கும் –நாளும்
நஞ்சென விலைவாசி மோசமாக்கும்!

வாணிகம் ஆயிற்றே தேர்தலின்றே –மக்கள்
வளமுற வாழ்கின்ற நாளுமென்றே!
நாணிடும் உள்ளமே காணவில்லை –ஏனோ
நல்லவர் அக்கரைப் பூணவில்லை!
தேன்தேடி மலரெங்கும் திரியும்வண்டே-பதவித்
தேன்தேடும் பித்தராம் ! திரியக்கண்டே!
ஏனில்லை மாற்றமே! நம்மிடையே – வருமா
எழுச்சியும் ஆற்றலும் நம்மிடையே!

புலவர் சா இராமாநுசம்

Monday, March 17, 2014

தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால் தோன்ற வேண்டும் அதில்மாற்றம் !



தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால்
தோன்ற வேண்டும் அதில்மாற்றம்
ஏற்றால் வெற்றியின் படியாக-நாம்
எடுத்து வைக்கும அடியாக
ஆற்றல் வேண்டும் நம்பணியை-வெற்றி
அடைவோம் பரிசாம் நல்லணியை
மாற்ற மில்லா மனத்திண்மை-என்றும்
மனதில் கொண்டால் தருமுண்மை

முயலா விட்டால் ஏமாற்றம்-நாம்
முயன்றால் தந்திடும் முன்னேற்றம
இயலா தென்றே எண்ணாதீர்-எதையும்
ஏனோ தானென பண்ணாதீர்
வயலாய் ஆகுதே பாலைநிலம்-முயற்சி
வழியால் வந்ததே அந்தவளம்
புயலாய் உழைக்க ஏமாற்றம்-நீங்கிப
போக வந்திடும் முன்னேற்றம்

எண்ணிச் செயலபடின் ஏமாற்றம்-வாரா
எதுவாய் இருப்பினும், முன்னேற்றம்
பண்ணுள் இசையிலை ஏமாற்றம்-அதைப்
பாடினால் வருவதும் ஏமாற்றம்
கண்ணில் விண்வெளி ஏமாற்றம் –நல்
கானல் நீரும ஏமாற்றம்
மண்ணில எவரே ஏமாற்றம் –அடையா
மனிதர் இருந்தால் பறைசாற்றும்