Wednesday, February 26, 2014

நான், படித்த நாளில் வடித்த கவிதை- எண் 1



புலவர் கல்லூரியில் அகப்பொருள் இலக்கண வகுப்பில் தலைவி
பிரிவிடை ஆற்றா நிலையில் வருந்தி எழுதியதாக நான், படித்த நாளில் வடித்த
கவிதை- எண் 1 புலவர் சா இராமாநுசம்

நானில்லை நீயெனக் கில்லை என்றால்-மேலும்
நலிந்துவிடும் நம்வாழ்வே பிரிந்துச் சென்றால்!
வீணில்லை என்வார்த்தை நம்பு என்றீர்-என்
வேதனையைக் குறைத்தேதான் நீரும் சென்றீர்!
ஏனில்லை சென்றபின்னர் அத்தான் நெஞ்சில்-அந்த
எண்ணம்தான் தினம்வாட்ட அறியேன் துஞ்சல்!
தேனில்லை என்றுமலர் பலவே நாளும்-தேடித்
திரிகின்ற வண்டெனவே ஆனீர் போலும்!

தாக்கவரும் புலிகூட பெண்ணைக் கண்டே-சற்று
தயங்குமெனச் சொல்லுகின்ற கதைகள் உண்டே!
காக்கவொரு ஆளில்லை பெண்ணை என்றால் – அவர்
கற்பென்ன கடைச்சரக்கா? தெருவில் சென்றால்!
நோக்குகின்ற தன்மையெல்லாம் பழுதே அத்தான்-அதை
நோக்கிபல நாள்முழுதும் அழுதேன் அத்தான்!
ஆக்கிவைத்த சோறாக இந்த ஊரே-என்னை
அள்ளிஉண்ண பார்க்கிறது வருவீர் நீரே!

காய்த்தமரம் காவலின்றி தனியாய் ஊரில் –நிற்க
கண்டவரின் கல்லடியை பெறுமே பாரில்!
வாய்தவனும் பிரிந்திருக்க, ஏழை ஆனால்-அவள்
வாழவழி இல்லையது சொல்லப் போனால்!
தேய்த்தெடுத்த சந்தணத்தை தெருவில் வீச-பின்
தேடிவந்து எடுப்பீரா மார்பில் பூச!
மாய்த்துவிடும் நெடும்பிரிவே என்னை உலகில்-இதை
மறவாதீர் மணவாளா துயரம் அலகில்!

பழுத்தபழம் எத்தனைநாள் வைத்தே அத்தான்-நல்ல,
பக்குவமாய் பாதுகாக்க முடியும் அத்தான்!
புழுத்ததென பின்னரதைக் கண்டு வீணே-நீர்
புலம்புவதில் பயனில்லை அதனால் நானே!
கழுத்துவரை நீர்ரலையில் நின்று விட்டேன்-அடுத்த
கணமென்ன அறியீரா நம்பிக் கெட்டேன்!
அழுத்துவதும் என்தலையே நீரில் நீரும்-உடன்
அரைக்கணமும் நில்லாது விரைந்தே வாரும்

புலவர் சா இராமாநுசம்