Saturday, February 15, 2014

அன்றே சொன்னது இதுதானே -இன்று ஆனது! உண்மை அதுதானே!



அன்றே சொன்னது இதுதானே -இன்று
ஆனது! உண்மை அதுதானே
நன்றே எண்ணிப் பாருங்கள் -என்ன
நடந்தது ஆய்ந்து கூறுங்கள்
----------------

அந்தோ பாவம் கெஜரிவாலே –ஆம்\
ஆத்மி கட்சி திவாலே!
வந்தார் ஊழல் ஒழிக்கவென –கிழிய
வாயும் ஒலிக்க முழக்கமென!
தந்தார் மக்களும் ஓட்டுகளை-வீசித்
தள்ளினர் இலஞ்ச நோட்டுகளை
அந்தோ!! உண்மை! அறியாரே – நாளும்
அடுத்தென விரைவில் புரிவாரே!

பக்கா ஊழல் துணையாக –இன்று
பதவி ஏற்றார் பிணையாக
முக்கா கிணறு தாண்டுவதா –இவர்
முடிவு நாட்டுக்கு வேண்டுவதா!!!?
பாழாய் கிணற்றில் வீழ்ந்துவிட்டார் –ஏனோ
பதவி ஆசையா !! தாழ்ந்துகெட்டார்
வாழா வெட்டி ஆட்சிக்கே –முதல்வர்
வந்தார் இவரென சாட்சிக்கே

புலவர் சா இராமாநுசம்

Friday, February 14, 2014

காதலர் தின வாழ்த்துக் கவிதை





காதலர் தினமே –எதிர்ப்பில்
        கலங்கா மனமே
ஆதலே வேண்டும் –அதுவே
        ஆவலைத் தூண்டும்
நோதலும்  வருமே –மேலும்
     நேசமும்  தருமே
சோதனை பலவே –அதனால்
     சோர்ந்திடல்  இலவே

சாதியும் பாரா – எதிலும்
    சமத்தும் கோரா
பீதியால்  அழியா-பிறர்
   பேச்சினால் ஒழியா
ஆதியில் இருந்தே – இது
   அழியா மருந்தே
பாதியில் பிரிவதே –வெறும்
   பருவத்தால்  வருவதே

உண்மைக்  காதல் –இருவர்
   ஒன்றென ஆதல்
திண்மை ஒன்றே –நெஞ்சில்
   தேவை  நன்றே
நன்மை விளைய –துயர்
    நஞ்சினைக்  களைய
இன்மை நீங்கும் – காதல்
    இளமையாய்  ஓங்கும்

புலவர்  சா  இராமாநுசம்


Wednesday, February 12, 2014

மட்டைப் பந்து விளையாட்டே-அது மட்டுமா சிறந்த விளையாட்டே!



நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்க தமிழ்நாட்டில்!
காயா பழமா விளையாட்டும்-அந்தோ
கண்டோம இந்த தமிழ்நாட்டில்!
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய் பிரிந்தாரும்!
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளரந்து நாளும் களைகட்டும்!

மட்டைப் பந்து விளையாட்டே-அது
மட்டுமா சிறந்த விளையாட்டே!
திட்ட மிட்டே ஆடுகின்றார்-பொருள்
தேடிட சூதையும் நாடுகின்றார்!
வெட்ட வெளிச்சம் ஆனபின்பும்-எதற்கு
வீணே நீயா நானென்றல்!
இட்டம் போல ஆடட்டும் -இனி
எப்படி யேனும போகட்டும்!

எங்கும் எதிலும் இதுவேதான்-உலகு
எங்கும் காணல் இதுவேதான்!
பொங்கும் உணர்வே இதுவேதான்-தினம்
போட்டியில் பார்ப்பது இதுவேதான்!
தங்குத் தடையே இல்லாமல்-நாளும்
தயங்கி எதுவும் சொல்லாமல!
இங்கே நானும் எழுதுவதும்-என்னுள்
இருப்பது நீயா நானன்றோ!

புலவர் சா இராமாநுசம்

Monday, February 10, 2014

சுற்றும் உலகம் தன்னோடு-முள் சுற்றி வருமே என்னோடு



சுற்றும் உலகம் தன்னோடு-முள்
சுற்றி வருமே என்னோடு
சற்றும் நேரம் தவறாமல்-கதிர்
சாய இரவும் வாராமல்
இற்றை வரையில இருந்திலவே-நேரம்
எதுவென மனிதர் அறிந்திடவே
ஒற்றைக் கையில் கட்டிடுவார்-வீட்டில்
உயர சுவற்றில மாட்டிடுவார்

ஆமாம் என்பெயர் கடிகாரம்-மக்கள
அடிக்கடி பார்க்க மணிநேரம்
தாமத மாகா அலுவலகம்-அவர்
தடயின்றி செல்ல இவ்வுலகம்
தாமே தம்மை சுற்றவிடும்-ஆனால்
தடைபட என்விசை கெட்டுவிடும்
நாமா காரணம் அவர் கோபம்-ஏனோ
நம்மிடம் வருவது பரிதாபம்

எத்தனை வகையில் என்னுருவம்-கால
இயற்கையில் மாற பலபருவம்
அத்தனை நிலைக்கும் ஏற்றபடி-எம்மை
அழகாய் அமைத்துளார் மற்றபடி
சத்தம் காட்டுவார் சிலபேரே-ஆனால்
சாந்தமாய் இருப்பார் பலபேரே
புத்தகம் போடலாம் எம்பெருமை-இதுவே
போதும் அறிவோம்கால தம்அருமை

புலவர் சா இராமாநுசம்