Monday, November 10, 2014

ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!


நிழலிங்கே நிஜமெங்கே நிலமை ஆச்சே –நாட்டில்
நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!
விழலுக்கே நீர்பாய்ச்சி வீணாய்ப் போனோம் –புலம்பி
விம்முவதில் பயனில்லை! சிலையே ஆனோம்!
தழலுக்கு சுடுவதுதான் இயல்பு தாமே –தெரிந்தும்
தடம்மாறி வீழ்ந்ததுவும் அந்தோ நாமே!
சுழலுக்குள் சிக்கிவிட்ட கதைதான் இன்றே-கவிதை
சொல்லுவது புரிந்தாலே போதும் நன்றே!


ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை
உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!
நாட்டைத்தான் கெடுத்தவர்கள் நாமே ஆகும் –தேர்தல்
நாடகத்தில் இன்றுவரை! துயரா போகும்!
கோட்டைதான் குறிக்கோளாய் கொள்கை என்றே-ஆட்சிக்
கோலோச்ச கட்சிகளும் கூடி நின்றே!
காட்டைத்தான் வீடாக்கி விட்டார்! நாளும் –ஏழை
கண்ணீரைத் துடைப்பதற்கு இன்றே ஆளும்!

பட்டதுயர் போதுமினி படவும் இயலா – நம்மின்
பகுத்தறிவு அணுவளவும் என்றும் முயலா!
இட்டபடி ஆள்வோரே வருவா ராக-நீங்கா
இன்னல்தான் நிலையென்ற நிலமை போக!
திட்டமிட்டு செயல்படுவோர் ஆட்சி வருமா –மக்கள்
தேவைகண்டு சேவைசெய்யும் திருநாள் தருமா!
குட்டதலை குணிவதுவோ! இனியும் வேண்டாம்-நிமிர
குறைதீரும்! காலமது கனியும்! ஈண்டாம்!

புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. காலம் கனியும் என்று காத்திருக்கிறோம் ஐயா...

    ReplyDelete
  2. சவுக்கடியா? இல்லை சாட்டையடியா?

    ReplyDelete
  3. கல் மனம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். கல்லுக்கு மனதிலிருந்தால் அதன் எண்ணம் என்னவென்று மனிதன் அறிந்துவிடுவான். ஆனால் கல் மனம் கொண்ட மனிதர்கள் மனதை அறிவது வாக்குரிமை கொண்ட இளகிய மனமுள்ள மனிதனால் சிரமமாக இருக்கிறதே ஐயா

    ReplyDelete
  4. கட்டுண்டோம்.பொறுத்திருப்போம்,காலம் மாறும்!
    அருமை ஐயா

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா.

    உணர்வுமிக்க வரிகள் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் காலம் விரைவில் மாறும் பகிர்வுக்கு நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அராஜகம் அழிந்து அறம் பெருகும் நாளும் வராதா என்றே நாளும் ஏங்குதே அய்யா நெஞ்சு !
    த ம 7

    ReplyDelete
  7. "ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை
    உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!" என்ற
    நல்ல கருத்தோடு சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  8. காலம் கனியும் என்று நம்புவோம் ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...