Friday, October 24, 2014

திரைகடல் ஓடு என்றாரே திரவியம் தேடு என்றாரே!



திரைகடல் ஓடு என்றாரே
   திரவியம் தேடு  என்றாரே
குறையிலா வழியில் அதைப்பெற்றே
   கொள்கையாய் அறவழி தனைக்கற்றே
நிறைவுற அளவுடன் நீதிசேர்ப்பீர்
   நிம்மதி அதனால் வரும்பார்ப்பீர்
கறையிலா கரமென புகழ்ப்பெறுவீர்
   கண்ணியம் கடமை எனவாழ்வீர்

வையம் தன்னில் வாழ்வாங்கும்
   வாழின்! வாழ்வில் பெயரோங்கும்
செய்யும் எதையும்  தெளிவாகச்
   செய்யின் வருவது களிவாகப்
பொய்யோ புரட்டோ செய்யாமல்
   போலியாய் வேடம் போடாமல்
ஐயன் வழிதனில் செல்வீரே
   அன்பால் உலகை வெல்வீரே!

தீதும் நன்றும் பிறர்தம்மால்
   தேடி வாரா! நம்மாலே
நோதலும் தணிதலும் அவ்வாறே
   நவின்றனர் முன்னோர் இவ்வாறே
சாதலின் இன்னா திலையென்றே
   சாற்றிய வள்ளுவர் சொல்ஒன்றே
ஈதல் இயலா நிலைஎன்றால்
  இனிதாம் அதுவும் மிகஎன்றார்!

எல்லா மக்களுக்கும் நலமாமே
   என்றும் பணிவாம் குணந்தாமே
செல்வர் கதுவே பெருஞ்செல்வம்
   செப்பிடும் குறளாம் திருச்செல்வம்
நல்லா ரவரெனப் புகழ்பெற்றே
   நாளும் நாளும் வளமுற்றே
பல்லார் மாட்டும் பண்பாலே
  பழகிட வேண்டும் அன்பாலே

                              புலவர்  சா இராமாநுசம்

2 comments:

  1. பொய்யோ புரட்டோ செய்யாமல்
    போலியாய் வேடம் போடாமல்// உண்மை அய்யா

    ReplyDelete
  2. வலைச்சரத்தில் தங்களது பதிவு பற்றிய அறிமுகத்தைக் கண்டேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete