Saturday, September 27, 2014

ஆயிரம் ஆயிரம் பக்தர்தினம் ஆடிப் பாடி வருகின்றார்!



புரட்டாசி-இரண்டாம் சனிக்கிழமை

ஆதவன் எழுவான் அதிகாலை
ஆயர் பாடியில் அதுவேளை
மாதவன் குழலை ஊதிடுவான்!
மாடுகள் அனைத்தும் கூடிடவே
ஒன்றாய்க் கூடிய ஆவினங்கள்
ஊதிய குழலின் இசைகேட்டு
நன்றாய் மயங்கி நின்றனவே
நடந்து மெதுவாய்ச் சென்றனவே!


ஆயர் பாடியில் மங்கையரும்
ஆடவர் பிள்ளைகள் அனைவருமே!
மாயவன் இசையில் மயங்கினரே
மகிழ்வுடன் பணியில் இயங்கினரே !
சேயவன் செய்தக் குறும்புகளே
செப்பிட இனிக்கும் கரும்புகளே!
தூயவன் திருமலை வேங்கடவா
திருவடி தலைமேல் தாங்கிடவா !

ஆயிரம் ஆயிரம் பக்தர்தினம்
ஆடிப் பாடி வருகின்றார்!
பாயிரம் பலபல பாடுகின்றார்
பரமா நின்னருள் தேடுகின்றார்!
கோயிலைச் சுற்றி வருகின்றார்
கோபுர தரிசனம் பெறுகின்றார்!
வாயிலில் உள்ளே நுழைகின்றார்
வரிசையில் நின்றிட விழைகின்றார்!

எண்ணில் மக்கள் நாள்தோறும்
ஏழாம் மலைகள் படியேறும்
கண்ணுக் கெட்டிய தூரம்வரை
கண்ணன் புகழேப் போற்றுமுரை
பண்ணொடு இசைத்தே உய்கின்றார்
பஜகோ விந்தமே செய்கின்றார்!
விண்ணொடு மண்ணை அளந்தவனே
வேங்கட உன்னடித் தொழுகின்றேன்

புலவர் சா இராமாநுசம்
(மீள்பதிவு)

10 comments:

  1. வணக்கம்
    ஐயா
    காலம்உணர்ந்து கவிதை பிறந்தது நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. "விண்ணொடு மண்ணை அளந்தவனே
    வேங்கட உன்னடித் தொழுகின்றேன்" என
    பக்தி உணர்வூட்டும் பா!
    தொடருங்கள்

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  3. திருமாலை பாடித் துதித்த பாமாலை சிறப்பு ஐயா! நன்றி!

    ReplyDelete
  4. வேங்கடவன் துதி
    அற்புதமாக மட்டுமல்ல், நெஞ்சைத் தொடும் நல்லோவியமாக
    நல்லதொரு வைணவ இலக்கிய நூலாகத் திகழ்கிறது.

    இதை பாடி பரமன் அருள் பெறவேண்டி நானும் விழைகிறேன்.

    மற்றும் ஒரு வேண்டுகோள்.

    இத்துணை ஆற்றல் பெற்ற தாங்கள்,
    வேங்கடவனின் பத்து அவதார பெருமைகளையும்
    காவியமாக தீட்டிட வேண்டும்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  5. சிறப்பான வேங்கடவன் கவி! சுபுத்தாத்தா சொன்னதை நாங்களும் வழி மொழிகின்றோம்! ஐயா!

    ReplyDelete
  6. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (25/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete