Thursday, September 25, 2014

கந்துவட்டி மேலாகும் நாளு முயர்வே-எம்மைக் கடங்காரன் ஆக்காதீர் கருணை காட்டும்!



மின்சார சுடுகாடு இனிமே வேண்டா-வீடே
மின்னின்றி சுடுகாடாம் ஆமே ஈண்டே
பொன்போல கட்டணமே விண்ணை முட்ட-மற்ற
பொருள்களின் விலையேற்றம் கண்ணீர் சொட்ட
என்செய்வர் மக்களுமே அம்மா யம்மா -மேலும்
அடிமேலே அடியா சும்மா சும்மா!
மின்சாரக் கட்டணத்தை குறைப்பீ ரம்மா-அடிக்கடி
மின்கட்டே வாட்டுவது, போது மம்மா!


நாதியின்றி வாழ்பவர் நாட்டி லின்றே-இன்று
நடுத்தர குடும்பங்கள் பாவ மன்றே
வீதியிலே இறங்கிவர இயலா ரென்றே-இந்த
வேதனையா? எண்ணுங்கள்! செய்வீர் நன்றே!
பாதிக்கும் பலவகையில்! பாரு மம்மா-அந்த
பாவிகளின் துயரத்தைத் தீரு மம்மா!
நீதிக்கும் குரல்கொடுக்க துணிய மாட்டார்-இரவு
நிம்மதியும் இல்லாமல் உறங்க மாட்டார்!

பணக்காரர் இதுபற்றி கவலை கொள்ளார்-இங்கே
ஏழைக்கோ ! இலவசம்! தொல்லை யில்லார்
கணக்காக செலவுதனை திட்ட மிட்டும்-மாதக்
கடைசியிலே கடன்வாங்கித் துயரப் பட்டும்
பிணமாக உயிரோடு நடக்கப் பலரும்-வாழும்
பேதைகளாம் நடுத்தரமே! பொழுதா புலரும்!?
குணமென்னும் குன்றேறி நின்றா ரவரே!-அவர்
கொதித்தாலே எதிர்வந்து நிற்பா ரெவரே!

வெந்துவிட்ட புண்ணிலே வேலும் பாயா-மேலும்
வேண்டுமா?முதல்வரே! நாளும் ஆய!
நொந்துவிட்டார் ஏற்கனவே அறிவீர் நீரே-அந்த
நோக்காடே தீரவில்லை! இதுவும் வேறே
 வந்துவிட்டால் துயர்நீங்க வழியே யில்லை!-எதிர்
வரலாற்றில் என்றென்றும் பழியே யெல்லை!
கந்துவட்டி மேலாகும் நாளு முயர்வே-எம்மைக்
கடங்காரன் ஆக்காதீர் கருணை காட்டும்!

புலவர் சா இராமாநுசம்

10 comments:

  1. ஒருபக்கம் இலவசமாகக் கொடுக்கவும் வேண்டாம். இன்னொரு பக்கம் இது போல ஏற்றிக் கொண்டே செல்லவும் வேண்டாம். அருமையான கருத்து.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. நடுத்தர வர்க்க மக்களின் மனக்குமுறலை சரியாக சொன்னீர்கள் !
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. சமுதாயத்தின் சாட்டையடி.....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. இலவசங்கள் ஒருபக்கம் சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கிறது
    என்றால் இன்னொரு பக்கம் கந்துவட்டி மீட்டர் வட்டி
    குருதியை உறிஞ்சிகிறது...
    அருமையான கவிதை பெருந்தகையே...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. அருமையான ! நச்சென்ற பொளேர் என்று அடிக்கும் கவிதை! வலது கையால் கொடுத்துவிட்டு, இடது கையால் அடிப்பது போன்று!

    ReplyDelete
  6. இலவலசங்களை அளித்து விட்டு விலையேற்றமும் கூடவே....

    நல்ல கவிதை.

    ReplyDelete