Monday, September 22, 2014

ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-மேலும் எதற்குத் தொடங்கினேன் முகநூலே!



ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-மேலும்
எதற்குத் தொடங்கினேன் முகநூலே!
தானேப் புயலென வாட்டிடவும் –துன்பம்
தந்துமே நெஞ்சை ஆட்டிடவும்!
நானேன் தவிக்க ஆனதுவே –கொல்லும்
நஞ்சென நினைவுகள் போனதுவே!
தேனே என்றது அக்காலம் –முதுமை
தீயெனச் சுட்டிட இக்காலம்!


ஆடிய கால்கள் ஓய்வதில்லை –தமிழ்
அன்னையின் அருளோ தேய்வதில்லை!
பாடிய வாயும் மூடாதாம் –பொங்கிப்
பரவும் நினைவுகள் வாடாதாம்!
கூடிய வரையில் எழுதிடுவேன் –மரபே,
கொள்கையாக் கொண்டே தொழுதிடுவேன்!
வாடியப் பயிருக்கு வான்மழையே-நீங்கள்
வழங்கிடும் மறுமொழி தான்மழையே!

புலவர் சா இராமாநுசம்

14 comments:

  1. //கூடிய வரையில் எழுதிடுவேன் //
    எழுதுங்கள்;புதியவர்களுக்கு வழி காட்டுங்கள்;
    தேன்மொழியாம் உங்கள் பதிவுகளுக்கு
    வான்மழையாய்க் கொட்டாவோ மறு மொழிகள்!

    ReplyDelete
  2. திரு சென்னை பித்தன் அவர்களின் கருத்தையே நானும் வழிமொழிகின்றேன். எழுதுங்கள். முடிந்தவரை எழுதுங்கள்.

    ReplyDelete
  3. அடடா.... என்ன அருமையாக உங்களின் நிலையைக் கவியில் கொடுத்திருக்கிறீர்கள்.....!!

    நாங்கள் இதையெல்லாம் கற்றறிய வேண்டும் ஐயா.
    தொடர்ந்து எழுதுங்கள் புலவர் ஐயா.

    (முதலில் எழுதியது எழுத்துப் பிழையாகி விட்டதால் நீக்கி விட்டேன் ஐயா)

    ReplyDelete
  4. #ஆடிய கால்கள் ஓய்வதில்லை –தமிழ்
    அன்னையின் அருளோ தேய்வதில்லை!#
    முடியாத போதும் எழுதும் உங்களுக்கு இது மிகவும் பொருத்தம் அய்யா !
    த ம +1

    ReplyDelete
  5. கவிதை வடிவிலேயே வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் உண்டான கவலைகளைச் சொன்னீர்.! புலவர் அய்யா, எனக்கும் சிலசமயம் எழுதி என்ன ஆகப் போகிறது என்ற சலிப்பே மிஞ்சுகிறது. ஆனாலும் அந்த முகமறியா நண்பர்கள் தரும் ஊக்கம் மேலும் பல ஆக்கங்களை படைக்கவே சொல்லுகிறது. வாழ்வினில் ஒரு பிடிப்பையும் தருகிறது என்பது உண்மையன்றோ? முகநூலைவிட வலைப்பதிவே மேல் என்றே நினைக்கிறேன் நான்.
    த.ம.7



    ReplyDelete
  6. தமிழ் அன்னையின் அருள் தேய்வதில்லை
    எழுதிய கரங்கள் ஓய்வதும் இல்லை
    தொடருங்கள் ஐயா
    வாசிக்கக்
    காத்திருக்கிறோம்

    ReplyDelete
  7. இனிய வணக்கம் பெருந்தகையே...
    உமது எழுத்துக்கள் எமக்கான ஊக்க மருந்து...
    நேரம் வாய்க்கையில் எமது கண்களுக்கும்
    செவிக்கும் இனிமை தாருங்கள்..
    காத்திருக்கிறேன் எப்போதும் உங்களது பதிவுகளுக்காக...
    உடல்நலம் பேணுங்கள் ஐயா...

    ReplyDelete
  8. ஐயா! அறிவுக்கும், படைப்புக்கும் ஓய்வில்லை! கவிதையில் ஒரு ஆதங்கம்! தாங்கள் எழுத வேண்டும் ஐயா! உங்கள் உடல் நலம் ஒத்துழைக்கும் வேளையில் எழுதுங்கள் ஐயா!

    ReplyDelete
  9. ஆஹா...
    என் மனதில் உள்ளதையும் எழுதிவிட்டீர்கள்!
    நன்று!!

    ReplyDelete
  10. தங்களைப் போன்றோரின் எழுத்துக்கள் தான் என்னைப் போன்றோருக்கு உத்வேகம் அளிக்கின்றன. இன்னும் எழுதுங்கள்; அய்யா.

    ReplyDelete
  11. உங்கள் போன்றவர்களுக்கு தமிழ் அன்னையின் அருள் ஒரு போதும் தேய்வதில்லை.

    முடிந்த போது எழுதுங்கள் புலவர் ஐயா.

    ReplyDelete