Wednesday, July 30, 2014

பாரறிய பா ஜ கா பொங்கி எழுவாய்-நீயும் பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்!


ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா
உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை!
பாரறிய பா ஜ கா பொங்கி எழுவாய்-நீயும்
பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்!
சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த
செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக!
வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்
விளங்கியிதை செயல்படுமா நமது இந்தியா!

தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி
தடுத்திருப்போம் ஐயகோ !ஏற்றோம் பழியே!
இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்
இனப்பற்றே வெறியாக விளையும் கேடே!
கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்!
பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே!

ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்
உலகமே உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே!
ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்
உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்!
கூசாமல் எம்மவரைக் கொன்றே விட்டான்-பெரும்
கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்!
பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே!

கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க!
மண்ணோடு அவனாட்சி மக்க வேண்டும்-தமிழ்
மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்!
எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்
ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்!
உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்
உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்!

புலவர் சா இராமாநுசம்

14 comments:

  1. உள்ளத்தின் குமுறல் அனலாய் தெறித்திருக்கிறது ஐயா தங்களது கவியில்.
    காலம் ஒருநாள் மாறும் என காத்திருப்போம்.

    ReplyDelete
  2. காலம் மாறும்
    நினைவுகள் நிறைவேறும்
    தம 1

    ReplyDelete
  3. இரு(நாட்டு) மதவாத கட்சிகள் சேர்ந்துக் கொண்டு தமிழினத்தை அளித்துக் கொண்டிருக்கின்றன !
    த ம 2

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா

    வரிவடிங்களில் எழுச்சி பிறக்கிறது... .காலம் ஒரு நாள் மாறும்ஐயா.. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. சிறந்த உணர்ச்சிப்பா
    உண்மைகள் உறங்குவதில்லை
    தொடருங்கள்

    ReplyDelete
  6. உங்களின் குரல் ஒருமித்த தமிழ்நாட்டின் குரலாக ஒலிக்கிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  7. மிக அருமையான சொல்லாட்சியும், பொருளாட்சியும் மிக்க கவிதை ஐயா! //கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
    காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க!//

    நல்ல வரிகள்! ஐயா!

    ReplyDelete