Saturday, June 21, 2014

கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக் கொடுமையை நீக்க இயலாதே!



இனிய உறவுகளே ! வணக்கம் !

நேற்று நான் எழுதிய பதிவைப் படித்து விட்டு தெருக்களில் குப்பைகள் சிதறியும் ,மண்டியும் கிடப்பதற்குக்
காரணம் ,அரசு மட்டுமல்ல ,மக்களின் பொறுப்பற்ற( சிலரின்) செயலும்
ஆகும் என்பதைப் பலரும் சுட்டியதன் விளைவே இக்கவிதை!

எண்ணிப் பாரும் நல்லோரே-நல்
இதயம் படைத்த பல்லோரே
கண்ணில் படுவது வீதியிலே-எங்கும்
காகித பிளாஸ்டிக் குப்பைகளே!
விண்ணில் காற்றில் பறந்திடுமே-வந்து
விரைவாய் முகத்தில் மோதிடுமே!
திண்ணிய முடிவும் எடுப்பீரா-குப்பை
தெருவில் போடவும் தடுப்பீரா!

வீட்டை சுத்தம் ஆக்குதும்-அள்ளி
வீதியில் குப்பையைத் தேக்குவதும்!
கேட்டை நாமே தேடுவதாம்-பிறர்
கேட்பினும் , அவரைச் சாடுவதாம்!
நாட்டைக் கெடுக்கும் நோயன்றோ-தொற்று
நோய்கள் பிறக்கும் தாயன்றோ!
கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக்
கொடுமையை நீக்க இயலாதே!

தொட்டி இருக்கும் ஆனாலும்-கையில்
தூக்கிக் கொண்டு போனாலும்!
எட்டி நின்றே குப்பைகளை-தூக்கி
எறிந்து விட்டுச் செல்வாரே!
தட்டிக் கேட்பின் வைவாரே-அந்த
தவறே நாளும் செய்வாரே!
கொட்டிய குப்பையோ உதறிவிட-மிக
குறையின்றி வீதியில் சிதறிவிடும்!

சொன்னால் செய்பவர் சிலபேரே-எவர்
சொல்லினும் கேளார் பலபேரே!
தன்னால் உணர்பவர் இருப்பாரே-சிலர்
தனக்கென என்றும் போவரே!
முன்னாள் அனுபவம் பலவற்றை-இங்க
முறையாய் அதிலே சிலவற்றை!
என்னால் ஏதோ முடிந்தவரை-ஐயா
எழுதினேன் தருவீர் கருத்துரையே!

புலவர் சா இராமாநுசம்

6 comments :

  1. வணக்கம்
    ஐயா.

    அழகான விழிப்புணர்வுக் கவிதை படிக்க படிக்க திகட்டவில்லை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஒவ்வொருவரும் தாம் இருக்கும் இடத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டால் நாடே தூய்மையாகும்
    நன்றி ஐயா
    தம 2

    ReplyDelete
  3. அவரவர் உணர வேண்டியது ஐயா...

    ReplyDelete
  4. "தொட்டி இருக்கும் ஆனாலும்-கையில்
    தூக்கிக் கொண்டு போனாலும்!
    எட்டி நின்றே குப்பைகளை-தூக்கி
    எறிந்து விட்டுச் செல்வாரே!" என்ற
    நிலை மாறினால்
    வீதி கொஞ்சம் நாறாதே!

    ReplyDelete
  5. ஒவ்வொருவரும் உணர வேண்டிய விஷயம். வீட்டைச் சுத்தமாக்கி தெருவை அசுத்தமாக்கும் மடமை.....

    ReplyDelete
  6. கவிதை மனதை தூய்மையாக்கும்
    கவிதையின் பொருள் சமூகத்தை சீர்படுத்தும்.
    நன்றுனந்து நடப்பதற்கு நல்லதொரு கவிதை அய்யா இது!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...