Thursday, May 8, 2014

இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே –என் இதயத்தை அறுக்கின்ற கூரிய வாளே!



இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே –என்
இதயத்தை அறுக்கின்ற கூரிய வாளே!
அன்றெந்தன் கைபிடித்து வந்த முதலாய் – பெற்ற
அன்னையாய், தாரமாய் இரவு பகலாய்!
நன்றென்னை காத்தவளேன் விட்டுப் போனாய் –எனக்கு
நன்றென்றா! ஐயகோ! சாம்பல் ஆனாய்!
கொன்றென்னை கூறுபோட தனிமை உலகம் –நாளும்
கோமகளே நீதானென் வாழ்வின் திலகம்!

மருத்துவத்தில் நீபடித்து பட்டம் பெற்றாய் –நான்
மாத்தமிழைக் கற்றதிலே மகிழ்வே உற்றாய்!
பொருத்தமுண்டா எனச்சிலரும் கேட்ட போதும் –முறுவல்
பூத்திட்ட உன்முகமே கண்ணில் மோதும்!
திருத்தமுற மகவிரண்டும் பெற்றோம் நாமே-வாழ்வில்
தேடியநல் செல்வமென வளர ஆமே!
வருத்தமற உன்நினைவே கவிதை வடிவில் –வலம்
வருகின்றாய்! வாழ்கின்றாய்! உலகில்! முடிவில்!

இருக்கும்வரை உன்நினைவில் கவிதைத் தருவேன் –நான்
இறந்தாலும் உனைத்தானே தேடி வருவேன்
உருக்கமிகு உறவுகளே உலகில் எங்கும் -இன்று
உள்ளார்கள்! முகமறியேன்! உணர்வில் பொங்கும்!
நெருக்கமிகு , அவரன்பில் ,இன்பம் கொண்டேன்!- அதுவே
நீயில்லாத் துயரத்தைத் தணிக்கக் கண்டேன்!
ஆனால்,…..?
அருத்தமில்லை ! நீயின்றி வாழ்தல் நன்றா!- கேள்வி
ஆழ்மனதில் எழுகிறதே! தீரும் ஒன்றா!

புலவர் சா இராமாநுசம்

41 comments:

  1. அஞ்சலிக் கவிதையை ரசித்தேன் !
    த ம 1

    ReplyDelete
  2. இருக்கும்வரை உன்நினைவில் கவிதைத் தருவேன் –நான்
    இறந்தாலும் உனைத்தானே தேடி வருவேன்
    உருக்கமிகு உறவுகளே உலகில் எங்கும் -இன்று
    உள்ளார்கள்! முகமறியேன்! உணர்வில் பொங்கும்!
    நெருக்கமிகு , அவரன்பில் ,இன்பம் கொண்டேன்!- அதுவே
    நீயில்லாத் துயரத்தைத் தணிக்கக் கண்டேன்!//

    அற்புதமான ஆழ்மனத் துயரை வெளிப்படுத்தும் வரிகள்! பகிர்ந்ததில் உங்கள் துயரம் குறையட்டும்! நன்றி ஐயா!

    ReplyDelete
  3. அன்னையைப் போல் அருமை மனைவிபோல்
    நிச்சயம் எந்த உறவும் ஆகா

    நிச்சயம் தங்கள் துணைவியாரும்
    தங்களைக் குறித்த நினைவில்
    இன்றைய நாளில் சொர்க்கத்தில்
    தவித்துக் கொண்டிருப்பார்

    அவர் இங்கிருந்து குடும்பத்திற்குச்
    செய்ய வேண்டிய கடமையை நீங்கள்
    இங்கிருந்து தொடர்ந்து செய்ய நீண்ட
    ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும்
    தரவேணுமாய் ஆண்டவனிடம்
    முறையிட்டுக் கொண்டும் இருப்பார்

    மனம் உருக்கும் கவிதை

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா.

    எல்லோருக்கும் இறுதி வழிப் பாதை...இதுதான் ஐயா
    மனதை உருகவைக்கும் வரிகள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அருமையான கவிதை நெஞ்சை உருக வைத்தது.

    ReplyDelete
  6. நல்லதோர் நினைவுக் கவிதை. என் அம்மா நினைவு வருகிறது எனக்கு. என் தந்தை 2002 இல் மறைந்த என் அம்மா பற்றி அவர் பெயரில் ஒரு புத்தகமே வெளியிட்டார் - ஹேமாஞ்சலி என்ற பெயரில். (என் அம்மா பெயர் ஹேமலதா)

    அந்தப் புத்தகத்திலிருந்து சில வரிகளை இங்கு பகிர்கிறேன்.

    .....................................................
    ..................................................
    கடைசி இருநாள் மட்டும் என்னைப் பார்த்து
    கண்மலங்க வாய்குழறி உதிர்த்த சொற்கள் :
    : "வீட்டுக்குப் போய்விடுவோம்" - : "வீட்டுக்குப் போய்விடுவோம்"

    ஐம்பத்தோராண்டு எம் தாம்பத்தியத்தில்
    எப்போதும் எதுவும் அவள் கேட்டதில்லை -
    இப்போது கேட்பதுவோ என்னால் முடியவில்லை -
    நப்பாசை - 'மருத்துவம் நல்லது செஇதிடாதா?'
    மனம் அழுது முகம் சிரித்து "போவோம்" என்பேன்.
    மறுபடியும் மறுபடியும் அதையே கேட்பாள்-
    வீட்டுக்கு வீட்டுக்கு என்றவளைப் - பாவி
    காட்டுக்கே கடைசியில் கொண்டு சேர்த்தேன் -

    ...............................
    ....................

    ReplyDelete
  7. நெஞ்சுருக்கும் கவிதை வரிகள்

    ReplyDelete
  8. மனதை நெகிழச்செய்த கவிதை.

    ReplyDelete
  9. துணைவியாரின் நினைவை போற்றியவிதம் சிறப்பு!

    ReplyDelete
  10. கேள்வி கேட்டு எழுதிவிட்டீர்
    கேளும் ஐயா! வாழ்வென்பது
    வேள்வி செய்யா தவமாகும்!
    வெறுமை என்று வரும்போதோ
    ஆள்மை கூட அகன்றுவிடும்!
    அர்த்த முள்ள வாழ்வெல்லாம்
    தோள்..மெய் கொடுத்த துணைவியரின்
    தூய நினைவைச் சுமப்பதுவே!!

    அன்புடன்
    அருணா செல்வம்.

    ReplyDelete
  11. எண்ணத்தைக் கவியாக்கும் அற்புதத் திறமை பெற்றவர் ஐயா தாங்கள்.
    ஈடு செய்ய இயலாத பல இழப்புகளில், முதன்மையானது தங்களின் இழப்பு

    ReplyDelete
  12. அவர்கள் உங்கள் உள்ளத்தில் என்றும் வாழ்கிறார்கள் ஐயா.அந்நினைவுகளே வாழ்க்கையை எதிர்நோக்க உங்களுக்கு ஊக்கம் தாராவோ?

    ReplyDelete
  13. நானும் உங்களது கண்ணீர் அஞ்சலியில் பங்கு கொள்கிறேன்! அம்மாவின் ஆன்மா இளைப்பாறட்டும்!

    ReplyDelete
  14. நினைவலைகள் நிம்மதி கொடுக்கட்டும்

    ReplyDelete
  15. ஈடு செய்ய இயலாத இழப்பு ஐயா...

    ReplyDelete
  16. நெஞ்சை உருக்கும் ஆக்கம்.

    வாழ்க்கைத்துணையை இழப்பது போன்ற கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது.

    ஈடு செய்யவே இயலாத இழப்புத்தான் ஐயா...;(

    ReplyDelete
  17. அய்யா வணக்கம்.
    மனக்கவலை தீர்க்குமொரு மருந்தும் இல்லை
    ........மக்களுடன் நட்புரிமை உறவாய் நிற்கும்.
    மனம் தேறி உம்பணிகள் தொடர வேண்டும்.
    .......மணக்குமந்த நினைவுகளில் வாழ்வீர் அய்யா.

    ReplyDelete
  18. வணக்கம் ஐயா !
    தங்களின் துணைவியார் மீது தாங்கள் வைத்துள்ள அன்பின் ஆழத்தை இப் பகிர்வின் மூலம் கண்டுணர்ந்தேன் தங்களைக் கணவராய் ஏற்றுக் கொண்ட அந்தப் புனிதவதி புண்ணியம் செய்தவரே நீங்கள் இப் புவியில் இருக்கும் மீதிக் காலம் வரைக்கும் அவரோடு வாழ்ந்த காலங்கள் நினைவில் வந்து மகிழ்வைத் தந்து துயர் போக்கிட வாழ்த்துகின்றேன் ஐயா .

    ReplyDelete
  19. // இருக்கும்வரை உன்நினைவில் கவிதைத் தருவேன் –நான் இறந்தாலும் உனைத்தானே தேடி வருவேன் //
    அருமையான கவிதை...!!

    ReplyDelete
  20. மறுபாதியின் பிரிவு.........மனசு நெகிழ்ந்து போச்சு :(

    எங்கள் அஞ்சலிகளும் இத்துடன்.

    ReplyDelete
  21. நினைவுகள் வாழ்க.

    ReplyDelete
  22. தமிழ் மணத்துடன் வெளிப்படுத்திய கவிதை வரிகள் அருமை..

    ReplyDelete
  23. நெஞ்சை உருக வைத்த கவிதை.

    ReplyDelete
  24. "வருத்தமற உன்நினைவே கவிதை வடிவில் – வலம்
    வருகின்றாய்! வாழ்கின்றாய்! உலகில்! முடிவில்!" என
    தாங்களே தங்களை ஆற்றுப்படுத்தி
    இலக்கியம் ஈந்து வாழ்தலே
    தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டு!

    ReplyDelete
  25. உங்களின் தவிப்பு புரிகிறது.கவிதையால் அஞ்சலி நன்று

    ReplyDelete
  26. இருக்கும்வரை உன்நினைவில் கவிதைத் தருவேன் –நான்
    இறந்தாலும் உனைத்தானே தேடி வருவேன்.....
    உங்கள் நேசமிகு வாழ்வின் பிரதிபலிப்பு அறிந்தேன் அய்யா....

    ReplyDelete
  27. பொருத்தமுண்டா எனச்சிலரும் கேட்ட போதும் –முறுவல்
    பூத்திட்ட உன்முகமே கண்ணில் மோதும்!

    ##இந்த வரிகள் நடப்பு வாழ்வில் என் மனைவியிடமும் கேட்கப்பட்ட ஒன்று.மரபுக்கவிதைகள் எழுதுவது சாத்தியமாகலாம்.ஆனால் எளிதாக புரியும் அளவுக்கு எல்லாராலும் எழுத இயலாது.அந்த வகையில் உங்கள் கவித்திறன் வியப்புக்கிரியது.

    ReplyDelete
  28. இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே –என்
    இதயத்தை அறுக்கின்ற கூரிய வாளே !

    அற்புதம், ஐயா உம்மை வாழ்த்த எமக்கு வயதில்லை.
    Killergee
    www.Killergee.blogspot.com

    ReplyDelete