Sunday, May 18, 2014

தேதியே ஆமது! பதினெட்டே-ஈழர் தேம்பி அலற திசையெட்டே!



மேதினி போற்றும் மேதினமே-உன்
மேன்மைக்கே களங்கம் இத்தினமே!
தேதியே ஆமது! பதினெட்டே-ஈழர்
தேம்பி அலற திசையெட்டே!
வீதியில் இரத்தம் ஆறாக-முள்ளி
வாய்கால் முற்றும சேறாக!
நீதியில் முறையில் கொன்றானே-அந்த
நினைவு நாளே துக்கதினம்!

உலகில் உள்ளத் தமிழரெங்கும்-இன்று
ஒன்றாய்க் கூடி அங்கங்கும்!
அலகில் மெழுகு ஒளியேந்தி-பெரும்
அமைதியாய் நெஞ்சில் துயரேந்தி!
வலமே வருவார் ஊரெங்கும்-மனம்
வருந்த மக்கள் வழியெங்கும்!
திலகம் வீரத் திலகமவர்-உயிர்
துறந்த தியாக மறவர்!

முள்ளி வாய்க்கால் முடிவல்ல-ஏதோ
முடிந்த கதையா அதுவல்ல!
கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்தக்
குடும்பமே அழிந்த நாளன்றோ!?
புள்ளி விவரம் ஐ.நாவே!-அறிக்கை
புகன்றதே நாற்பது ஆயிரமே!
உள்ளம் குமுற அழுகின்றார்-கூடி
உலகத் தமிழர் தொழுகின்றார்!

அகிலம் காணாக் கொடுமையிதே-நாம்
அறிந்தும் அமைதியா-? மடமையதே!
வெகுள வேண்டும் தமிழினமே-எனில்
வீரம் விளையாக் களர்நிலமே!
நகுமே உலகம் நமைக்கண்டே-வெட்கி
நம்தலை தாழும் நிலையுண்டே!
தகுமா நமக்கும் அந்நிலையே-மாறும்
தமிழகம் பொங்கின் சூழ்நிலையே!

புலவர் சா இராமாநுசம்

16 comments :

  1. "முள்ளி வாய்க்கால் முடிவல்ல-ஏதோ
    முடிந்த கதையா அதுவல்ல!
    கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்தக்
    குடும்பமே அழிந்த நாளன்றோ!?" என்பது
    உண்மை தானையா - நான் கூட
    முள்ளி வாய்க்காலில் பல முறை
    செத்துப் பிழைத்தேனையா!

    ReplyDelete
  2. இந்த துயரத்திற்கு துணை நின்றவர்கள், நடந்த தேர்தலில் காணாமல் போனார்கள் என்பது மட்டுமே சற்று ஆறுதலான செய்தி !
    த ம 2

    ReplyDelete
  3. விரைவில் நீதி வெல்லுமையா வேதனை இனியும் வேண்டாமே !
    முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்பது தான் உண்மை தங்களின்
    இந்த கவிதைப் பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா .

    ReplyDelete
  4. வேதனையான நாள் தான்....

    முடிவல்ல.... உண்மை.

    ReplyDelete
  5. "வெகுள வேண்டும் தமிழினமே-எனில்
    வீரம் விளையாக் களர்நிலமே!'

    உங்களைப் போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் தான், ஈழத்தமிழர்கள் இன்றும் தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்கிறார்கள். நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  6. அகிலம் காணாக் கொடுமையிதே - நாம்
    அறிந்தும் அமைதியா -? மடமையதே !
    வெகுள வேண்டும் தமிழினமே - எனில்
    வீரம் விளையாக் களர்நிலமே !
    நான் ருசித்தவை(ர)வரிகள் ஐயா,
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  7. சிலர் உணர்வு வேகத்தில்
    வார்த்தைகளை
    அடுக்கி கவிதை என்று வெறுப்பேற்றுவார்கள்

    ஆனால் உங்கள் கவிதை ரொம்ப செழுமை...
    உங்கள் மாதிரி ஒரு உணர்வாளரின் தளத்தை இப்போதாவது கண்டேன் என்கிற மகிழ்வு ...

    http://www.malartharu.org/2013/02/blog-post_7031.html

    ReplyDelete
  8. உணர்வை சுண்டியிழுக்கும் கவிதை நன்று

    ReplyDelete
  9. உயிர்ப்புள்ள படிப்போரின் உணர்வைத் தூண்டும் அற்புதக் கவிதை அய்யா!
    படிப்போரை எழுதத் தூண்டும்.

    துடிக்கும் தோள்கள் உனிலிலையோ? - உடல்
    துளைத்த வெடிக்குப் பதிலிலையோ?
    படிக்கும் தமிழாற் பயனிலையோ? - வீரப்
    பரம்பரை வாழ்ந்திட இடமிலையோ?
    இடிக்கும் அழுகுரல் கேட்டிலையோ? - உன்
    இதயம் அதுவும் கற்சிலையோ?
    முடிக்கும் பகையை வேரறுக்கும் - திரு
    முயற்சியில் உனக்குப் பங்கிலையோ?

    ReplyDelete
  10. வேதனை புண் இன்னும் ஆறவில்லை என்பது உண்மைதான் அய்யா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...