Friday, May 16, 2014

வந்தது தேர்தல் முடிவேதான்- இனி வருமா நமக்கே விடிவேதான்!



வந்தது தேர்தல் முடிவேதான்- இனி
வருமா நமக்கே விடிவேதான்! -இதுவரை
நொந்தது போதும் என்றேதான் –மனம்
நோகா திருக்க நன்றேதான் –மத்தியில்,
தந்தனர் ஐயா பெரும்பான்மை! ! –ஊழல்
தடுப்பீர் ! காப்பீர் ! சிறுபான்மை! –தேர்தல்,
சந்தையில் ,விற்பதா !? குடியரசு - இங்கே
சனநாயகம் இன்றெனில் முடியரசே

எண்ணியே நாளும் ஆளுங்கள்- மக்கள்
இன்னல் எதுவென கேளுங்கள் -செயலில்,
புண்ணிய பாபம் பாருங்கள் –ஏழை
புலம்பலை முதலில் தீருங்கள் -அவர்,
கண்ணில் வடித்திட நீரில்லை –அந்தோ
கண்டதோ தினமும் துயரெல்லை- இம்
மண்ணை நம்பிய உழவன்தான் –இன்று
மண்ணொடு மண்ணாய்ப் போனான்தான்

ஆலையில் வேலையும் ஏதுமில்லை- கொத்து
அடிமை முறையும் ஒயவில்லை- மக்கள்
சாலையே வாழும் இடமாக –கட்சி
சண்டையால் ஆண்டி மடமாக –இனியும்-
நாளைக் கடத்துமா மக்களவை – எதிர்
நாளில் காட்டும் காலமவை – இளையோர்
வேலை வாய்ப்புகள் பெருகட்டும் - வீண்
விதண்டா வாதங்கள் கருகட்டும்

புலவர் சா இராமாநுசம்

14 comments:

  1. வணக்கம் ஐயா
    அரசியல்வாதிகளுக்கான மிகச்சரியான வேண்டுகோளாக தங்கள் கவிதை எனக்கு படுகிறது. மக்கள் வரிபணத்தை வீணடிக்காது கபட நாடகங்கள் அரங்கேறும் அரங்கமாக நாடாளுமன்றம் அமையாமல் மக்கள் நலனுக்கான திட்டங்கள் அரங்கேறுவதாக இருக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா..

    ReplyDelete
  2. சிறப்பான கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  3. //வேலை வாய்ப்புகள் பெருகட்டும் - வீண்
    விதண்டா வாதங்கள் கருகட்டும்//
    நல்லதே நடக்கட்டும் ஐயா

    ReplyDelete
  4. தேவையான அறிவுரையை அழகாகச் சொன்னீர்கள் புலவரே.

    ReplyDelete
  5. தேவையான அறிவுரையை அழகாகச் சொன்னீர்கள் புலவரே.

    ReplyDelete
  6. வரலாம்...வராமல் போனாலும் போகலாம்
    இன்றைய தேவை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
    அதை செய்யத் தவறினால் அடுத்து ஜெயிப்பார்களா? என்பது சந்தேகமே ...அய்யா

    ReplyDelete
  7. சொன்னவைகள் நடக்க வேண்டும்... நடக்கும்... நம்புவோம் ஐயா...

    ReplyDelete
  8. சிறப்பான கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  9. சரியான வேண்டுகோள்

    ReplyDelete
  10. நம்பித்தான் நம் கடமையைச் செய்திருக்கிறோம்
    நம்பிக்கையுடன் காத்திருப்போம்
    அனைவரின் மன ஓட்டத்தையும்
    அருமையாக வெளிப்படுத்தும் அற்புதக் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நல்ல வேண்டுகோள். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

    ReplyDelete
  12. ஆட்சிக் கட்டிலில் ஏறி இருப்பவர்கள் ,கட்டிலே சுகம் என்று இருந்து விடாமல் ,நல்ல காரியம் பல செய்தால் ..மக்கள் இக்கட்டில் இருந்து தப்பிக்க முடியும் ,நல்லதே நினைப்போம் !
    த ம 9

    ReplyDelete
  13. நல்ல வேண்டுகோள்தான் ஐயா! நடக்க வேண்டுமே! நம்பிக்கையுடன் இருப்போம்!

    ReplyDelete