Tuesday, April 29, 2014

உள்ளத்தில் எழுகின்ற எண்ணம் தாமே –திரண்டு உருவாக, கருவாகி, கவிதை ஆமே!



மறவாது  எழுதுவேன்!  மரபில்  கவிதை –என்
    மனமென்னும் தோட்டத்தில், போட்டீர்  விதையே!
இறவாது  வாழ்வது  அதுதான்  என்றே –பலர்
     இயம்பிட, உள்ளத்தில்  ஏற்றேன்  இன்றே!
தரமாக  தந்திட  முயல்வேன்  நானே –அன்னை
     தமிழ்தானே  நமக்கெல்லாம்  திகட்டாத்  தேனே!
வரமாக வழங்கினீர்  மறுமொழி  தம்மை – என்னை
     வாழ்திட,,! வளர்ந்திட,! வணங்குவேன்  உம்மை!

உள்ளத்தில்  எழுகின்ற  எண்ணம் தாமே –திரண்டு
     உருவாக, கருவாகி, கவிதை  ஆமே!
பள்ளத்தில் வீழ்ந்திட்ட  நீர்போல்  தேங்கி–பின்னர்
     பாய்கின்ற நிலைபோல  நெஞ்சினில்  தாங்கிக்,
கொள்ளத்தான்  எழுதிட முயல்வேன் !மேலும் –அதில்
      குறைகண்டே  சொன்னாலும்  திருத்தி,  நாளும்!
எள்ளத்தான்  சொன்னாலும் வருந்த  மாட்டேன் – மேலும்
      எவர்மனமும்  புண்பட  கவிதைத்  தீட்டேன்!

தனிமைமிகு  இருள்தன்னில்  தவிக்க லானேன் –முதுமை
       தளர்வுதர  அதனாலே முடங்கிப்  போனேன்!
இனிமைமிகு  உறவுகளே  நீங்கள்  வந்தீர் – நானும்
       இளமைபெற  மறுமொழிகள்  வாரித்  தந்தீர்!
பனிவிலக  வெம்மைதரும் கதிரோன்  போன்றே –எனைப்
       பற்றிநின்ற  துயர்படலம்  விலகித்  தோன்ற!
நனியெனவே  நலமிகவே  துணையாய்  நின்றீர் – வாழ்
        நாள்முழுதும்  வணங்கிடவே  என்னை  வென்றீர்!
 புலவர் சா இராமாநுசம்
 (மீள்பதிவு)

14 comments:

  1. வலைதனில் மரபுக் கவிதைகள்
    பாடுவோர் அருகிவரும் இந்நாளில்
    புலவர் அய்யாவின் மரபு வழுவா
    புலமைக் கவிதைகள்! வாழியவே!

    ReplyDelete
  2. ஐயா தாங்கள் அன்று ஆவியின் புத்தக வெளியீட்டு விழாவில் சொல்லியது போல் மரபுக் கவிதையின் அழகே அழகுதான்! இனிமை! அருமை!

    ReplyDelete
  3. இப்போது எழுதியதைப் போன்றே பொருத்தமாய் இருக்கிறதே !
    த ம 3

    ReplyDelete
  4. இனிமைமிகு உறவுகளே நீங்கள் வந்தீர் – நானும்
    இளமைபெற மறுமொழிகள் வாரித் தந்தீர்!///

    எனக்கும் இது மிக மிகப் பொருந்தும்
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    /

    ReplyDelete

  5. வணக்கம்

    சிந்துக் கவிதைகள் வந்து மலா்ந்திடுமே
    இந்த வலையில் இனித்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  6. வரிகள் என்றும் பொருந்தும் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. அருமையான கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  8. மரபுக் கவிதையால் மனம் தொட்ட ஐயனைத்
    தொடரும் பாக்கியம் கிட்டியதே புண்ணியம் எனக் கருதுகையில்
    இடரும் வந்து சேருமோ சொல் இனிக்கும் கவிதை இங்கிருக்க !

    வாழ்த்தும் வயது எனக்கில்லை ஐயா ஆதலால் எப்போதும் போல
    வணங்கிச் செல்கிறேன் .

    ReplyDelete
  9. வலையுலக உறவுகள் உலகு முழுதும் நிரம்பி வழியும்போது, தனிமை ஏன் ஐயா வரப்போகிறது.
    கவிதை கண்டு மகிழ்ந்தேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  10. மீள்பதிவும் நெஞ்சைவிட்டு மீளாமல் நிற்கிறது
    தாள்பணிந்தேன் நற்கவிக்குத் தாழ்ந்து!

    ReplyDelete
  11. மீள்பதிவு என்றாலும் மீண்டும் ரசித்த பதிவு.

    ReplyDelete
  12. தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்

    ReplyDelete
  13. சிறப்பான பதிவுகள் தொடரட்டும் .வாழ்த்துக்கள்

    ReplyDelete