Thursday, April 3, 2014

கல்லாரைக் கற்றோராய் ஆக்கலினிது-மூடக் கயவரைக் கண்டாலே விலகலினிது!


எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது-நல்
   இல்லறம் ஒன்றேதான் என்றுமினிது!
பெண்மையை மதித்தலே உலகிலினிது-ஏதும்
   பிழையின்றி பேசலே மொழிக்கினிது!
கண்ணியம் காத்தலே மாந்தர்க்கினிது-கல்வி
   கற்றாரைக் காமுற்று காணலினிது!
புண்ணியம் தேடலே வாழ்விலினிது-செய்யும்
   பொதுவாழ்வு தன்னிலே நேர்மையினிது!


கொல்லாமை விரதாமாய்க் கொள்ளலினிது-நல்
    கொள்கையின் வழிநாடி நடத்தலினிது!
இல்லாமை நோயின்றி இருத்தலினிது-தம்
    இயல்பாலே காண்போரைக் கவர்தலினிது!
சொல்லாமை பொய்தன்னை அறத்திலினிது-எதுவும்
    சொந்தமெனச் சொல்வதை மறத்தலினிது!
கல்லாரைக் கற்றோராய் ஆக்கலினிது-மூடக்
    கயவரைக் கண்டாலே விலகலினிது!


பாராட்டி பகைவரை பேசலினிது-அப்
     பகைமையும் அதனாலே நீங்கலினிது!
ஊரோடு ஒத்துமே போதலினிது-தம்
     உறவோடு ஒற்றுமையே ஆதலினிது!
வேரோடு முள்தன்னைக் களைதலினிது-நல்
    வேந்தன்கீழ் வாழ்தலே மாந்தர்க்கினிது!
சீரோடு இதுபோலப் பலவுமினிது-எடுத்துச்
     செப்பிட ஆனாலும் போதுமினி(யி)து!

                    புலவர் சா இராமாநுசம்


15 comments:

  1. வாழ்வியல் தத்துவம் அருமை அய்யா....

    ReplyDelete
  2. இனிது இனிது எதுவெனக்கேட்டால் புலவரின் வரிகள் கேட்டல் இனிது படித்தல் இனிது அதன் படி நடத்தல் இனிது என்போம்.

    ReplyDelete
  3. அருமையான வரிகள்! நன்றி!

    ReplyDelete
  4. சீரோடு இதுபோலப் பலவுமினிது-எடுத்துச்
    செப்பிட ஆனாலும் போதுமினி(யி)து!

    ஆஹா எத்தனை இனிது எடுத்துரைத்தீர்
    அத்தனையும் வாழ்வில் பொன் என்பேன்
    நன்றி ! வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  5. வரிகள் ஒவ்வொன்றும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. இனிது இனிது
    ஒவ்வொரு வரியும் இனிது ஐயா நன்றி
    த.ம.5

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. பாராட்டி பகைவரை பேசலினிது-அப்
    பகைமையும் அதனாலே நீங்கலினிது!
    ஊரோடு ஒத்துமே போதலினிது-தம்
    உறவோடு ஒற்றுமையே ஆதலினிது!//

    அருமையான வரிகள்! இப்படி இருந்துவிட்டால் உலகமே இனிதாகி விடுமே!

    கவிதை அருமை ஐயா!!!

    த.ம.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  9. இனிய வணக்கம் பெருந்தகையே...
    கவி இனிது, சொல்லாக்கம் இனிது...

    ReplyDelete
  10. "ஊரோடு ஒத்துமே போதலினிது-தம்
    உறவோடு ஒற்றுமையே ஆதலினிது!" என்ற
    வழிகாட்டலைப் பின்பற்றுவோம் இனிதே!

    ReplyDelete

  11. வணக்கம்!

    இனியவை அத்தனையும்! என்னுடைய நெஞ்சே
    கனிய..வை! உன்னுள் கமழ்ந்து!

    ReplyDelete