Monday, March 24, 2014

வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!



வானத்தை  முட்டுவதா  விலைவாசி யிங்கே – வாங்க
   வழியில்லா மக்கள்தான் பரதேசி  யிங்கே!
ஏனென்று  கேட்காத  ஊடகங்க ளிங்கே - ஏதும்
   எல்லையின்றி  நடக்கின்ற நாடகங்க ளிங்கே!
தானின்று நடக்கின்ற  நாடுமது மிங்கே- மக்கள்
   தடம்மாறி போகின்ற நிலைதானே! இங்கே!
தேனல்ல கொட்டுவதும் தேளாகும்!  இங்கே –நாளும்
   திகைப்போடு கேட்கின்றார்  அரசுதான் எங்கே?
 
 
கால்கிலோ  காய்கூட  வாங்கிடவே இயலா –ஏழைக்
   கண்ணீரைத்   துடைத்திட யாருமே முயலா!
நாள்முற்றும் உழைத்தாலும் அரைவயிறு  காணா-சாகா
   நடைப்பிணமே! அவன்வாழ்வு! கண்டுமதை  நாணா!
ஆள்வோரே! கண்மூடி துயிலொன்று கொண்டால்? –ஆள
   ஆதரவு  தந்தார்க்கு  செய்கின்ற   தொண்டா?
மாள்வாரா  மீள்வாரா விரைந்துசெயல் படுவீர் –எனில்
   மட்டற்ற துயராலே நீரும்தான் கெடுவீர்!
 
 
நஞ்சாக ஏறிவிட  நாள்தோறும் அந்தோ –தெரு
  நாய்போல அலைகின்றார் உள்ளமதும்  நொந்தே!
பிஞ்சாக உதிர்கின்ற காய்போல ஆனார் –தமக்குள்
   பேசியே திரிகின்ற  பித்தனாய்ப் போனார்!
பஞ்சாக அடிபட்டும் பறந்துடு வாரோ –மீண்டும்
    பாராளும் தேர்தலில்  மறந்துடு  வாரோ?
அஞ்சாது நடக்காதீர்!  ஆள்வோரே ஈண்டும் –உடன்
    ஆவனவும்  செய்தால்தான் வருவீராம்  மீண்டும்!
                                புலவர்  சா  இராமாநுசம்
உரிய நேரம் கருதி  மீள்பதிவு!

12 comments:

  1. //நஞ்சாக ஏறிவிட நாள்தோறும் அந்தோ –தெரு
    நாய்போல அலைகின்றார் உள்ளமதும் நொந்தே!//

    ஆரோக்கியம் கருதி பழங்களைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை சொல்லுகின்றனர்! ஆனால் அவற்றின் அருகே கூடச் செல்ல முடியாத அளவு விலை வாசியிருக்க, மும்பையில் ரோட்டோரம் வாழும் சிறு பிள்ளைகள் பசி பொறுக்க முடியாமல் அதை மறக்க, பெட்ரோலை நுகர்ந்து அந்த மயக்கதில் பசி மயக்கத்தைக் களைவதாக வாசித்தது நினைவுக்கு வருகின்றது! இங்கு ஒரு வேளைக்கனா, ஒரு கைப்பிடிச்சோற்றுக்கே வழி இல்லாமல் இருக்கிறதே! கொடுமைதன்!

    நல்ல பகிர்வு ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி!

      Delete
  2. இலவசங்களுக்கு மயங்காமல் இருக்க வாக்காளர்களுக்கு உங்கள் அறிவுரை பயன் தரும் !
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி!

      Delete
  3. //ஆள்வோரே ஈண்டும் –உடன்
    ஆவனவும் செய்தால்தான் வருவீராம் மீண்டும்!//

    இச்செய்தி விழவேண்டியவர்கள் காதில் விழவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி!

      Delete
  4. மீள்பதிவு இனி வரும் எல்லா நாட்களுக்கும் பொருந்தும் போல...

    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி!

      Delete
  5. இலவசங்களுக்கு அடிமையாகி விட்ட மக்கள்... அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள்..... ம்ம்ம்ம்..

    ReplyDelete
  6. மீள் பதிவு தான் என்றாலும் மக்களுக்கு விழிப்புணர்வைத்தரும் ஆரோக்கிய கவிதை அப்பா... அரசியல்வாதிகள் மக்களை எப்படி எல்லாம் தன் நலத்துக்காக பயன்படுத்துகின்றனர்.. பாவம் மக்கள் :(

    த.ம.6

    ReplyDelete
  7. மீள் பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா .ஐயம் தீரும் வரை
    அறிய வேண்டிய நற் கருத்துக்கள் தொடர்வதே நன்று .த.ம 7

    ReplyDelete

  8. "வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க
    வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!
    ஏனென்று கேட்காத ஊடகங்க ளிங்கே - ஏதும்
    எல்லையின்றி நடக்கின்ற நாடகங்க ளிங்கே!" என்ற
    உண்மை கூறும் அடிகளை விரும்புகிறேன்.

    ReplyDelete