Friday, March 21, 2014

என்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த இறைவனை எண்ணி நிந்தித்தேன்!


     சின்னப் பையன் வருவானே-தினம்
           செய்தித் தாளும் தருவானே!
     சன்னல் வழியும் எறிவானே –கதவுச்
           சாத்திட குரலும் தருவானே!
     இன்னல் ஏழையாய் பிறந்ததுவா-பிஞ்சு
           இளமைக்கு அந்தோ சிறப்பிதுவா!
     என்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த
           இறைவனை எண்ணி நிந்தித்தேன்!

    பள்ளிச் செல்லும் வயதன்றோ-தினம்
           பாடம் படிக்கும் வயதன்றோ!
    துள்ளி ஆடும் வயதன்றோ-தோழன்
           துரத்த ஓடும் வயதன்றோ!
     அள்ளிய செய்தித் தாளோடும்-நஞ்சி
           அறுத்த செருப்புக் காலோடும்!
    தள்ளியே சைக்கிளை வருவானே-நேரம்
           தவறின் திட்டும் பெறுவானே!

     சட்டம்  போட்டும் பயன்தருமா-கல்வி,
           சமச்சீர் ஆகும் நிலைவருமா!
     இட்டம் போல நடக்கின்றார்-இங்கே
           ஏழைகள் முடங்கியே கிடக்கின்றார்!
     திட்டம் மட்டுமே போடுகின்றார்-தம்
           தேவைக்கும் அதிலே தேடுகின்றார்!
     கொட்டம் போடும் அரசியலே-எங்கும்
           கொடிகட்டிப்  பறக்குது! நாதியிலே!

     இமயம் முதலாய் குமரிவரை-எங்கும்
           இருந்திட வேண்டும் ஒரேமுறை!
     நம்மைஆள தேர்தல்முறை-இன்று
           நடைமுறைப் படுத்தும் அந்தமுறை!
     அமைய குரலும் விடுப்பீரே-கல்வி
           ஆணையம் அமைத்து கொடுப்பீரே!
     சமயம் இதுவே முயன்றிடுவீர்-உயர்
           சமச்சீர் கல்வி பயின்றிடுவீர்!

             புலவர்  சா  இராமாநுசம்

11 comments:

  1. பேப்பர் போடும் பையன்கள் மேல் எனக்கும் எப்போதும் கருணைப் பார்வை உண்டு ,அதை கவிதையில் வடித்து விட்டீர்கள் !
    த ம 1

    ReplyDelete
  2. எத்தனை அழகான ஒரு கவிதை கருணை மிக்க கவிதை செய்தித்தாள் தரும் பையனுக்கு!!!

    இமயம் முதலாய் குமரிவரை-எங்கும்
    இருந்திட வேண்டும் ஒரேமுறை!
    நம்மைஆள தேர்தல்முறை-இன்று
    நடைமுறைப் படுத்தும் அந்தமுறை!
    அமைய குரலும் விடுப்பீரே-கல்வி
    ஆணையம் அமைத்து கொடுப்பீரே!
    சமயம் இதுவே முயன்றிடுவீர்-உயர்
    சமச்சீர் கல்வி பயின்றிடுவீர்!

    இந்தக் கனவு ஜெயிக்க வேண்டும்! செய்தித்தாள் தரும் பையங்கள் போன்ற எத்தனையோ சிறு வயதில் உழக்கும் பையன்களும், சிறுமிகளும் கல்வி கற்க ஒரு நல்ல கல்வி முறை அமைய வேண்டும்!

    த.ம.

    ReplyDelete
  3. செய்தித்தாள் போடும் மாணவர்களும் உள்ளனர்... அவர்களின் நிலையும் சிறக்க வேண்டும்...

    ReplyDelete
  4. சிறுவர்தொழிலாளர் நிலை நிச்சயம் ஒழியவேண்டும். சமச்சீர் கல்விமுறை அமைய வேண்டும்.

    ReplyDelete
  5. எளிய மனிதர்களின் மீதான பார்வை சிலிர்க்க வைக்கிறது அய்யா ...
    படைப்பு மனதில் பதிந்தது ...

    ReplyDelete
  6. அருமை கவிதை புலவர் ஐயா.

    “அரசியல் நமக்கு அவசியம்“ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதுங்கள் புலவர் ஐயா.

    ReplyDelete
  7. புத்தகப் பையைச் சுமக்க வேண்டிய பையன், பேப்பர் கட்டினைச் சுமந்தால்....
    வேதனைதான் மிஞ்சுகிறது ஐயா
    இந்நிலை என்றுதான் மாறுமோ

    ReplyDelete
  8. ஓட்டலில் வேலை செய்வோர்,குப்பை பொறுக்குவோர் என்று நிறையப்பேர் பள்ளி வயதில் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை ஆங்காங்கே காண முடிகிறது. வறுமை ஒழியும் வரை இவரை தடுப்பது கடினமே. அழகான தமிழில் ஆதங்கங்களை கொட்டி விட்டீர் ஐயா!

    ReplyDelete