Friday, February 7, 2014

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர் போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!



அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-இதை
  அனைவரும் அறிந்திடின் வருவது சிறப்பே!
பெரிதிலும் பெரிதாம் குறையின்றி உறுப்பே-உலகில்
   பிறத்தலும் வாழ்தலும்! உண்டா? மறுப்பே!

பகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்
   படைப்பில்! இதனால், பெருமையும் கிட்டுமே!
தொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்
   தொண்டுமே செய்து  வாழ்வதும் நன்றே!

பிறந்தோம் ஏதோ வாளர்ந்தோம் என்பதாய்-உடலைப்
   பேணி வளர்த்திட சுவையாய் உண்பதாய்!
இறந்தோம் இறுதியில்! வாழ்வதும் அல்ல-நாம்
   இறப்பினும் பலரும் நம்பெயர் செல்ல!

கற்றவன் ஆகலாம் கலைபல ஆக்கலாம்-பிறர்
   கற்றிடச் செய்யும் வழிபல நோக்கலாம்!
மற்றவர் வாழ்ந்திட உதவிகள் ஆற்றலாம்-மற்றும்
   மனித நேயத்தை மறவாது போற்றலாம்!

சுற்றம் தாழலாம் சுயநலம் நீக்கலாம்-தீய
  சொற்களைத் தவிர்க்க, இனிமையைச் சேர்க்கலாம்!
குற்றம் காண்பதே! குணமென வேண்டாம்-ஏதும்
   குறையிலா மனிதரே காண்பதோ? ஈண்டாம்!

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
   போற்றிட வாழ்வீர் மனிதரே!!  அதுவரை!
இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
    ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!

                               புலவர் சா இராமாநுசம்

36 comments:

  1. /// இறப்பினும் பலரும் நம்பெயர் செல்ல! ///

    சிறப்பாக சொன்னீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  3. வாழவேண்டிய முறையை கவிதையில் படம்பிடித்துக் காட்டி விட்டீர்கள் !
    த ம 2

    ReplyDelete
  4. உண்மை. உண்மை .உண்மை

    ReplyDelete
  5. இந்த உலகமே பூஜ்ஜியம்தான்
    வாழ்ந்துவிட்டு மடியுமட்டும் நல்லதையே அதிகம் செய்வோம் :)
    நன்று ஐயா

    ReplyDelete
  6. //பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
    போற்றிட வாழ்வீர் மனிதரே!! //

    சிறப்பான கவிதை! தோன்றின் புகழொடு தோன்றுக......வள்ளுவர் நினைவுக்கு வந்தார்! இன்றுதான் உங்கள் வலைப்பூ க்டைத்துப் பார்த்தோம்! தொடர்கிறோம்!!

    த.ம.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  7. "மனித நேயத்தை மறவாது போற்றலாம்!"

    சிறப்பான கவிதை.

    ReplyDelete
  8. அனுபவத்தில் பிறந்த
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. //அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-//

    இப்படிக் கிடத்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மரணம் வரும் வரை ஏற்றதை செய்வோம் என அழகாக் முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete
  10. சிறப்பான வரிகள் மற்றும் மனிதர்கள் இவைகளை செய்தால் நலம் என்ற எண்ணம் வாழ்க....

    ReplyDelete
  11. அருமையானதொரு வாழ்வியல் கவிதை
    பெருந்தகையே...

    ReplyDelete
  12. சிறப்பான இலக்கிய நயம் நிறைந்த கவிதை. ஆனால் கருத்துக்கள் சில ஏற்க முடியுமா என்பது ஐயமே.

    வாழ்வது தொண்டு செய்ய என்பதுதான் பாவின் அடிக்கருத்து. சரிதான். தொண்டு தமக்கும் தன்னையே கொழகொம்பெனப் பிடித்துவாழ்வோருக்கும் செயத பிறகுதானே மற்றவருக்கு ? அப்படி செய்யும்போது வாணாளின் கடைசிப்பகுதி வந்துவிடுகிறதல்லவா? உடம்பில் தெம்பின்றி கையிலே காசுகள் நீர்த்து என்ன தொண்டு எவருக்குச் செய்யவியலும்?

    தொண்டு செய்யவும் ஒரு பாமர மனிதருக்கு வேண்டியவை இல்லாதபோது எப்படிச்செய்ய முடியும்?

    இரண்டாவது: ஏன் பிறர் போற்ற வாழவேண்டுமென நினைக்கிறீர்கள்? ;பிச்சைக்காரன் உங்களிடமிருந்து காசுகளைப்பெற்றால் உங்களைப்போற்றுகிறான். இல்லாவிட்டால் வைது விடுகிறான் உங்கள் காதுப்பட. நீங்கள் உதவி செய்யும் நபர்கள் - அவர்கள் உங்கள் நெருங்கி உறவாக இருந்தாலும், - அவ்வுதவியின் தரத்தை நிர்ணயித்து அது குறைவாக இருப்பின் உங்களை விட்டுவைப்பார்களா? பாசமலரின் சிவாஜி கணேசன் தன் தங்கைக்கும் மனைவிக்கும் புடவைகள் எடுத்துக்கொடுத்து அழுத காட்சியைக்காட்டியிருப்பார்களே? பார்த்திருப்பீர்களே?

    ஆக, நீங்கள் செய்யும் தொண்டு பிறர் எதிர்பார்ப்புக்களை முழுமையாக திருப்தி படுத்தும்போதே போற்றப்படுவீர்கள்\. வாழ்க்கை குறைகள் நிறைந்தது. மனிதர்களின் நீதியும் நியாயமும் அவர்கள் சொந்தக் கணிப்பின் பேரில்தான் அமைகிறது. ஒசாமா பின் லேடனுக்கும் லட்சக்கணக்கில் ஆதர்வாளர்கள் உண்டு. மஹாத்மா காந்திக்கும் லட்சககண்க்கில் எதிரிகள் உண்டு. ஈவேராக்கும் எத்தனை எத்தனை எதிரிகள் இன்று. அதே சமயம், அவர் இருந்திருக்காவிட்டால் நான் இந்நிலைக்கு வந்திருக்க மாட்டேன் என்போரும் உண்டல்லவா?

    இன்னொன்றையும் பாருங்கள்; தொண்டு செய்யவும் நீங்கள் விளம்பரம் செய்ய வேண்டும். பணமில்லாத்தொண்டு என்றால் நீங்கள் உதாசீனம் செய்யப்படுவீர்கள். பணம் அதாவது ஃபீசு அதிகம் என்றால் உங்களிடம் வருவார்கள். வரதட்சணைவேண்டாமென்னும் மாப்பிள்ளையிடம் ஏதோ ஒரு குறையிருப்பதாக நினைபதைப் போல. வள்ளலார் தொண்டு செய்ய விழைந்தார். ஆனால் அவரிடம் எவருமே வரவில்லை: 'கடை விரித்தேன் கொளவாரில்லை! என்ற நெஞ்சொடு கிளத்தாரில்லையா?

    போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். என்னால் என்ன முடியுமே எவருக்குச் செய்ய முடியுமோ அதை நான் செய்து மடியவேண்டும். நான் கொடுக்க வேண்டிய கணக்கு இறைவனுக்கு மட்டுமே. பிறர் போற்றவேண்டுமென நான் நினைக்கவில்லை. என் வலக்கை கொடுப்பது இடக்கைக்குக்கூட தெரியவேண்டாம்.

    இஃதே உன்னதமான வாழ்க்கை. இஃதே இறையோடு கூடிய வாழ்க்கை - என்னைப்பொறுத்தவரை.

    ReplyDelete
  13. மனித நேயத்தை மறவாது போற்றுவோம்

    ReplyDelete
  14. "பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
    போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!
    இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
    ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!" என்ற
    சிறந்த வழிகாட்டலை விரும்புகிறேன்.

    ReplyDelete
  15. வாழ்க்கை அர்த்தம் நிறைந்தாக இருக்கவேண்டும் என்பதை சிறப்பான வரிகளில் நயத்துடன் சொல்கிறது கவிதை. நன்றி ஐயா

    ReplyDelete
  16. மிகவும் சிறப்பான மனித நேயக்கருத்துக்களை நயமாக எடுத்துரைத்திடும்
    தங்களது இந்தப் பாடலை இங்கே அடாணா எனும் ராகத்தில் கேளுங்கள்.
    https://soundcloud.com/meenasury/pulavarkavithaiindru
    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete