Wednesday, February 5, 2014

படித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல் பழிவந்து சேருமய்ய மூட்டை யாரே!



புலவர் கல்லுரி விடுதியில் தங்கிய
           போது, இரவில் ஏற்பட்ட அனுபவம்.....!


பாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான்
          பலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்!
  நோயெடுத்து போனதய்யா தூங்கா உடலும்-உடன்
          நோக்குகின்ற நேரத்தில் மறைந்தே விடலும்!
  வாயெடுத்து  சொல்லுகின்ற கொடுமை யன்று-தினம்
           வாட்டுகின்றீ்ர் வருந்துகிறோம் தீரல் என்றே!
  தாயெடுத்து அணைக்காதக் குழந்தை போல-ஐயா
         தவிக்கின்றோம் மூடுமய்யா வாயை சால!


  நித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ
           நீங்கு கீன்றீர் விரைவாக உமது இடமே!  
  சித்தம்தான் யாமறியோம் செய்யும் தொண்டே-முடிவாக
         செப்பினால்  நாங்களும் அதனைக் கண்டே!
  தத்தம்தான் செய்திடுவோம் உயிரைக் கூட-வீண்
           தகராறு வேண்டாமே! வயிறும் மூட!
  இரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் சொல்லும்-வந்து
         இரவெல்லாம் வருவதை நிறுத்திக் கொள்ளும்!


   மடித்தயிடம் மேலுறையின் சந்தும் பொந்தும்-நீங்கள்
            மறைந்துறையப் புகலிடமே உமக்குத் தந்தும்
   கடித்தயிடம் தெரியாமல்  துளியும் இரத்தம்-அடடா!
            கசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம்!
    அடிக்கடியே வருகின்றீர் அந்தோ தொல்லை-மேலும்
            அடுக்கடுக்காய் வருகின்றீர் உண்டா எல்லை!
    படித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல்
             பழிவந்து சேருமய்ய மூட்டை யாரே!


                                புலவர் சா இராமாநுசம்

8 comments:

  1. மூட்டைப் பூச்சிக்குமா? அருமை

    ReplyDelete
  2. // இரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் சொல்லும்... //

    ரசிக்க வைக்கும் வரிகளையும் ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  3. மூட்டைப் பூச்சிக்கும் ஒரு அழகிய கவிதையா? இப்போதெல்லாம் மூட்டைப் பூச்சியைக் காண்பதே அரிதாக இருக்கிறது. இனிமேல் இத்தகைய கவிதையைத் தாங்கள் எழுத முடியாது என்பது வருத்தமளிக்கிறது. த.மா.3

    ReplyDelete
  4. சிறந்த பகிர்வு
    மூட்டையை வைத்து
    நன்றே
    பா புனைந்தீர் -
    மாறுபட்ட பாடுபொருள்!

    ReplyDelete