Thursday, February 20, 2014

தள்ளியே நாட்களை வைத்துள்ளார்-தூக்குத் தண்டனை இரத்தா செய்துள்ளார்!


மக்கள் எழுச்சி கண்டு நீதிமன்றம் எட்டு வாரம்
தூக்குத் தண்டனையைத் தள்ளி வைத்தபோது போராட்டம்
தொய்வின்றி தொடர எழுதியது!

தள்ளியே நாட்களை வைத்துள்ளார்-தூக்குத்
தண்டனை இரத்தா செய்துள்ளார்
உள்ளுவீர் தமிழரே ஓயாதீர்- இன
உணர்வில் அணுவும் தேயாதீர்
கொள்ளியை வைத்தவர் அவரென்றே-மேலும்
கொடுமை செய்வது தவரென்றே
எள்ளியே உலகம் நகைக்கட்டும்-செய்ய
ஏதும் வழியின்றி திகைக்கட்டும்

மக்கள் எழுச்சி கண்டாரே-இன்று
மாநிலம் மாற்றிக் கொண்டாரே
இக்கணம் முதலாய் மேன்மேலும்-ஏதும்
இடையின்றி ஒவ்வொரு நாள்போலும்
திக்கது எட்டும் பரவட்டும்-இனத்
தீயெனும் உணர்வே விரவட்டும்
தக்கது அறவழி போராட்டம்-உயிர்
தருவது அல்லென கூறட்டும்

எட்டு வாரம் எதற்காக-ஆட்சி
இணங்கி வருமா இதற்காக
குட்டுப் பட்டதை மறப்போமா-மேலும்
குட்டுப் படுதல் சிறப்பாமா
ஒட்டும் உறவும் வேண்டாமே-இன
உணர்வது ஒன்றாம் ஈண்டாமே
கொட்டும் முரசே ஒலிக்கட்டும்-வெற்றி
கொண்டதை சங்கே முழங்கட்டும்

முடங்கிட அனைத்து வேலைகளும்-நகரின்
முக்கிய அனைத்து சாலைகளும்
தொடங்கிட ஊர்வல ஆர்பாட்டம்-நாளும்
தொடர்கதை ஆகிட போராட்டம்
திடங்கொள செய்வீர் மறவர்களே-நன்கு
திட்டமே வகுப்பீர் உறவுகளே
அடமிகு அரசும் இறங்கிவரும்-போர்
அறவழி செய்யின் நன்மைதரும்


மீள்பதிவு!             புலவர்  சா  இராமாநுசம்

5 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    ஒரு புரட்சிக் கவிதை படிக்கும் போது.. ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது.. கட்டாயம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமை.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. #அடமிகு அரசும் இறங்கிவரும்#
    நீங்கள் சொன்னது நடந்து விட்டது அய்யா !
    த ம 3

    ReplyDelete
  3. நல்லதொரு பகிர்வு ஐயா! ரத்தான செய்தி வரும் சமயம்....அது தள்ளிவைக்கபட்டது என்ற ரத்தம் கொதிக்கும் செய்தியும் வந்துள்ளதே ஐயா!

    த.ம.

    ReplyDelete
  4. நல்லதொரு பகிர்வு... நன்மை விரைவில் வர வேண்டும் ஐயா...

    ReplyDelete