புத்தாண்டே நீவந்து பிறந்து விட்டாய் –பொங்கும்
பொங்கலெனும் தைமகளாய் இல்லம் தொட்டாய்!
வாழ்த்தியுனை வரவேற்க மனமே இல்லை –இன்றே
வரலாறு காணாத வறட்சி தொல்லை!
ஆழ்தியெமை சென்றதாம் சென்ற ஆண்டே –இங்கே
ஆடுமாடும் மேய்வதற்கா ? பயிரும் ஈண்டே!
பாலுண்டே பழமுண்டே பொங்கல் வைக்க –புதிய
பச்சரிசி உண்டா பொங்கல் வைக்க!
நாளுண்டு வாழ்வதற்கு உண்டா உணவும் –வரும்
நாள்தோறும் காண்போமே துயரக் கனவும்!
சாலையிலே தொழிலாளி முடங்கி விட்டான் –நாள்
முழுவதுமே வேலையின்றி துயரப் பட்டான்!
ஆலையெலாம் ஓடாது புழுதி படிய – மக்கள்
அனைவருமே ஓயாது அழுது மடிய!
சாலையோரம் வாழ்பவனைப் பார்க்கும் போதும்-அவன்
சாக்குப்பை பாய்தண்ணில் படுக்கும் தீதும்!
மாலைமுதல் காலைவரை பனியில் நடுங்க –காண்போர்
மனமெல்லாம் ஐயகோ! துயரில் ஒடுங்க!
தைபிறந்தால் வழிபிறக்கும் முன்னோர் கூற்றே –அதை
தைமகளே இனியேனும் நீயும் ஏற்றே!
கைகொடுத்து காப்பாற்ற வேண்டும் தாயே-செய்யின்
கரம்கூப்பி தொழுவோமே தெய்வம் நீயே!
வற்றாது காவிரிநீர் வருதல் வேண்டும் –மேலும்
வான்மழையும் பருவத்தே தருதல் வேண்டும்!
கற்றார்க்கும் ஏற்றபணி கிடைக்க வேண்டும் – நாளும்
கல்லாமைப் படிப்படியாய் அகல வேண்டும்!
மின்வெட்டு முற்றிலுமே நீங்கச் செய்வாய் –ஏழை
முகம்மலர பசியின்றி வாழச் செய்வாய்!
புண்பட்டுப் போனோமே சென்ற ஆண்டே – நல்ல
புகழ்பெற்றுப் போவாயா ? இந்த ஆண்டே!
உங்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய புத்தாண்டு
பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
அழகான கவிதையுடன் புலவர் ஐயாவின் வாழ்த்தும்! மிக்க மகிழ்வுடன் தங்களுக்கும் வாழ்த்துச் சொல்கின்றேன் நான்!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteவாழ்த்துக்கள் .
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteகவிதையினூடாக வந்த வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteவாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteநன்றி... தங்களுக்கும் எங்களின் வாழ்த்துகளும் ஐயா..
ReplyDeleteஇன்றே வரலாறு காணாத வறட்சி தொல்லை!உண்மைதான் அய்யா
ReplyDeleteசிறப்பான கவிதை......
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
அழகான...
ReplyDeleteஅருமையான...
சிறப்பான...
கவிதை ஐயா...
வாழ்த்துக்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். மின்வெட்டு விரைவில் காணாமல் போய்விடும்போல் தெரிகிறதே! உங்கள் வேண்டுகோள்களில் ஒன்று நிறைவேறிவிடும்.
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா!
ReplyDeleteசிறந்த கருத்துப் பகிர்வு
நடைமுறை வாழ்க்கையை ஒப்பிட்டு வாழ்த்திய விதம் மிகவும் ரசிக்க வைத்தது ஐயா. தங்கள் பணி சிறக்க, நீள் ஆயுள் பெற்று கவிபுனைந்து பார் போற்றும் வகையில் இன்று போல் என்றும் வாழ இந்த சிறியவனின் வேண்டுதல் தொடரும். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.
ReplyDelete