Friday, January 17, 2014

எதையும் தாங்கும் இதயம்தான் –இனி என்றும் நமக்கே வேண்டுந்தான்!



 எதையும்  தாங்கும்  இதயம்தான் –இனி
   என்றும்  நமக்கே  வேண்டுந்தான்
கதையோ  அல்ல!  உண்மைநிலை! –இன்று
    காண்பதில்! கேட்பதில் உள்ளநிலை!
உதைபடா  மீனவன்  நாளில்லை – அவன்
    உரைப்பதைக்  கேட்டிட ஆளில்லை!
இதைவிடக்  கொடுமை  வேறுண்டா –அரசுகள்
    இணைந்து செயல்படும்  வழியுண்டா!?



வானம்  பொய்பினும்  பொய்யாதாம் –காவிரி
    வற்றிப்  போனதும்  மெய்யேதாம்!
தானம்  தருவதாய்  நினைக்கின்றான் –கன்னடன்
     தண்ணீர்  என்றால்  சினக்கின்றான்!
மானம்  இழந்தே  வாழ்கின்றோம் –உரிய
    மதிப்பும்  இழந்து  வீழ்கின்றோம்!
ஏனாம்  இந்த  இழிநிலையே –ஆய்ந்து
     எண்ணிட  ஒற்றுமை  நமக்கிலையே!



கட்சிகள்  இங்கேப்    பலப்பலவே –காணும்
     காட்சிகள்  தினமும்  பலப்பலவே!
முட்செடி  முளைப்பது  போலிங்கே –சாதி
    முளைவிடின்,  வாழ்வதும்  இனியெங்கே?
பதவியும்  சுகமும்  பெரிதாக –நல்ல
      பண்பும்  குணமும்  அரிதாக!
உதவும்  நிலைதான்  இனியில்லை –நம்
     உயிருக்கு  கப்போ நனியில்லை



கொலையோ  இங்கே  கலையாக –மாளா
     கொள்ளை  மேலும்  நிலையாக!
தலையே  கேட்பினும்  கூலிப்படை –வெட்டித்
    தந்திடும்  என்றால்  ஏதுதடை!
விலைதான்  அதற்கும்  உண்டாமே –இந்த
    வேலையே அவர்க்குத்  தொண்டாமே!
அலைபோல்  மனமே  அலைகிறதே –ஊஞ்சலாய்
      ஆடியே  தினமும்  குலைகிறதே!
             
                        எனவே
எதையும்  தாங்கும்  இதயம்தான் –இனி
   என்றும்  நமக்கே  வேண்டுந்தான்
                 புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அன்றே சொன்ன அண்ணா தீர்க்கதரிசிதான்!
    +2

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
  3. கூலிப்படை பற்றி எழுதிய முதல் பதிவர் நீங்களாகத்தான் இருக்கும். நன்றி. த.ம.5

    ReplyDelete
  4. நல்லாச் சொல்லியிருக்கீங்க...
    தமிழ்மணத்தில் வாக்கு அளித்தாச்சு...

    ReplyDelete
  5. மனவேதனையை வெளிப்படுத்தும் வரிகள். எதையும் தாங்கும் இதயம் கிடைக்கப்பெற்றவர்கள் வரம்பெற்றவர்கள்.

    ReplyDelete
  6. சிறப்பாச் சொன்னீங்க புலவை ஐயா...

    த.ம. +1

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...