Wednesday, December 24, 2014

என் வெளிநாட்டுப் பயணம் பற்றிய அறிவிப்பு!



அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்!
நான்  இன்று இரவு (புதன்) மணிலா போகிறேன்! என் ,மகளும் பேரனும் உடன் வருகிறார்கள்! அங்குதான்என் மருகன் இருக்கிறார் ஒரு வாரம் வெளிநாட்டில் தங்கி விட்டு திரும்பியதும் மீண்டும் உங்களோடு
தொடர்பு கொள்வேன் உங்கள் வாழ்த்தும் அன்பும் தேவை! நன்றி
புலவர் சா இராமாநுசம்

Monday, December 22, 2014

என் முகநூல் பதிவுகள்!




ஒரு துறவியைப் பார்க்க,தந்தையோ, மற்ற உறவினரோ எவர் வந்தாலும் , அவர்கள் தான் முதலில் துறவியை வணங்க வேண்டும் அதன்பின்னர் துறவி வணங்கலாம் . வந்தது தாய் என்றால் துறவிதான் முதலில் வணங்கியாக வேண்டும் இது நியதி!

 தமிழன் எவருக்கும் தாழ்ந்தவன் அல்ல
தமிழன் எவரையும் தாழ்த்துபவனல்ல
அடங்கத் தெரிந்தவன் தமிழன்
அடக்கவும் தெரிந்தவன் தமிழன்
அன்புக்கே அடிபணிவான் தமிழன்
அதிகாரத்திற்குக் கட்டுப்பட மாட்டான்

காவல் தானே பாவையர்க்கு அழகு
பெண்கள் தம்மைத் தாமே காத்துக் கொள்வதுதான் அவர்களுக்கு அழகாகும்.
கீழோர் ஆயினும் தாழ உரை
தன்னைவிடத் தாழ்ந்தவராயினும் அவர்களிடம் அடக்கமாகப் பேசு

வாழ்க்கையில் ஒருவனைப் பற்றி முழுதும் அறியாத நிலையில், அவனிடம் நம்பிக்கை வைப்பதும் தவறு! அதேபோல ஒருவனை முழுதும் ஆய்ந்து தெளிந்த பின்னர் அவனைப் பற்றி சந்தேகப்படுவதும் தவறு ! இவை, இரண்டு குணங்களும் நம்மிடை இருக்குமானால் என்றும் தீர்க்க இயலா துன்பமே தரும்!

நேற்று என்பது! இறந்தகாலம் நடந்த நிகழ்வுகள் நல்லதோ , கெட்டதோ நினைவில் கொள்வோம்! இன்று என்பது நிகழ்காலம் செய்வன எண்ணிச் செயல் படுத்துவோம்! நாளை என்பது எதிர்காலம்!
நேற்றும் இன்றும் செய்ததை எண்ணி திட்டமிடுவோம்! இவை வாழ்கையில் வெற்றிபெற வழிவகுக்கும்!

புலவர்  சா  இராமாநுசம்

Friday, December 19, 2014

மத்தியிலே கல்விக்கோர் அமைச்சர் இவரே மறவாதீர் அவருக்கே இல்லை நிகரே!



மத்தியிலே கல்விக்கோர் அமைச்சர் இவரே
     மறவாதீர் அவருக்கே இல்லை நிகரே!
புத்தியிலே நமக்கெல்லாம் என்றே நாளும்
    புலம்புகின்றார் கண்டபடி பாவம்! மேலும்,
எத்னையோ பணியிருக்க அதனை விட்டே
    எண்ணாமல் ஆயாமல் வேலைக் கெட்டே!
பித்தமது பிடித்தவராய் மாற்றி வீணே
    பேசுகின்றார் ஐயகோ! நியாயம் தானோ!?


ஆண்டாண்டு காலமாக  இருக்கும்  ஒன்றே
      அறியாது ஐயகோ  மாற்றல்  என்றே!
தூண்டாதீர்  மதவெறியை  அமைதி  கெடுமே
      தொடராது  இனியேனும்  வாழ  விடுமே!
வேண்டாத  வீண்வேலை ஆகும் தானே
       விடுமுறையே இல்லையென பின்பு, தானே
கூண்டா மக்களது  எதிர்புக்   கண்டே
      கூறவில்லை என்பதுவா  மக்கள்  தொண்டே!

 புலவர் சா இராமாநுசம்

Wednesday, December 17, 2014

மன்றாடிக் கேட்கின்றோம் மீண்டும் மீண்டும்!


மாண்புமிகு முதல்வரே எண்ணிப் பாரீர்-இன்றே
மனம்குமுறும் மக்கள்துயர் ஆய்ந்து காரீர்!
மீண்டுமிங்கே விலைவாசி உயர்ந்து போக-மேலும்
மின்சாரக் கட்டணமோ எமனாய் ஆக!
வேண்டிபலர் விண்ணப்பம் தந்தும் வீணே -ஏதும்
விடிவில்லை! முடிவதுவே! வேதனை தானே!
ஆண்டவனே !என்றிங்கே மக்கள் நாளும்-எண்ணி
அல்லல்படல்! விதுயென்ப! இதுதான் போலும்!


ஆற்றாது அழுகின்ற அவலம் நன்றா -இதுவும்
ஆளுகின்ற அரசுக்கு அழகாம் என்றா?
சாற்றாது சத்தமின்றி ஏற்றி விட்டீர் –அந்தோ!
சரியல்ல! போராட தூண்டி விட்டீர்!
ஊற்றான ஊழலையே ஒழித்தால் போதும் -மேலும்
உயர்த்திடவே தேவையில்லை! நீங்கும் தீதும்!
மாற்றாகும் இவ்வழியே! செய்தல் வேண்டும் -என்றே
மன்றாடிக் கேட்கின்றோம் மீண்டும் மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Monday, December 15, 2014

தூய்மை வருமே துணை!


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல உம்மை
இகழ்வாரைத் தாங்கி இருப்பீரேல் –புகழாக
வாய்மை வழிநடத்த வாழ்ந்தாலே உள்ளவரை
தூய்மை வருமே துணை

புலவர்  சா  இராமாநுசம்

Friday, December 12, 2014

சீண்டாதீர் நாளும் செய!



ஏற்றதுறை பற்றிமட்டும் ஆளும் அமைச்சர்
சாற்றுவது மட்டும் சரியாகும் !- மாற்றுங்கள்!
வேண்டாத வீண்பேச்சே வேதனைக்கு வித்தாமே
சீண்டாதீர் நாளும் செய!

புலவர்  சா  இராமாநுசம்

Thursday, December 11, 2014

பட்டுவிடும் ஒற்றுமையே பார்!



விழியேதும் இல்லான் விருப்பம்தான் காண!
வழியேதும்  இல்லாத ஒன்றே !– மொழியென்றா!
திட்டமிட்டே செய்கின்றார்! தேவையில்லை !செத்தமொழி
பட்டுவிடும் ஒற்றுமையே பார்!

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, December 9, 2014

பேறாகு மென்றேதான் பேசு!



சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயலேதான்!-தொல்லுலகில்!
மாறாத உண்மையது மாமேதை வள்ளுவர்சொல்
பேறாகு மென்றேதான் பேசு

புலவர்  சா  இராமாநுசம்

Monday, December 8, 2014

எண்ணையின்றி ஏற்ற விளக்கு!



வாழைக்கு தானீன்ற காய்கூற்றம் ஆமாபோல்
ஏழைக்கும் ஆயிற்றே வாக்குரிமை!- கோழையவன்,
மண்ணெண்ணை இல்லையென மத்தியிலே சொல்கின்றார்
எண்ணையின்றி ஏற்ற விளக்கு

புலவர்  சா  இராமாநுசம்

Saturday, December 6, 2014

நல்லோரே செய்வேன் நயந்து!



நாட்டு நடப்புடனே நாளும் வருஞ்செய்தி
கேட்டே தானெடுத்தே கேடுகளை- தீட்டுமென
பல்லோரும் சொல்ல பணிவுடனே ஏற்றேனே
நல்லோரே செய்வேன் நயந்து

புலவர்  சா  இராமாநுசம்

Friday, December 5, 2014

வாழும் முறைப்படியே வாழ்ந்தாலே போதுமய்ய!



வாழும் முறைப்படியே வாழ்ந்தாலே போதுமய்ய!
சூழும் சுகம்தானே சொந்தமென!-ஏழுலகும்
போற்றிப் புகழ்ந்திடவே போகின்ற நாள்வரையில்
சாற்றித் தருமே அது!

புலவர்  சா  இராமாநுசம்

Thursday, December 4, 2014

பொன்றும் புகழென்றே போற்று !




விட்டுக் கொடுப்பதுடன் வீண்வாதம் செய்யாமல்
தட்டிக்  கொடுப்பதவும்   தக்கதன்றோ ! –கட்டியவர்
என்றும் இனித்திடவே இல்லறம் ! இருவருக்கும்
பொன்றும்  புகழென்றே  போற்று

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, December 2, 2014

சதமலவே இவ்வுலகில் எதுவும் என்றும்- கால சக்கரமே சுழல்கிறது அறிவோம் நன்றும்!


முதல்வர் என்ற பதவிக்கோர் தகுதியுண்டே –மக்கள்
முதல்வரே அக்கருத்தை மனதிற் கொண்டே
உதவிடவே வேண்டுகிறோம் ஆவன செய்ய-இங்கே
உள்ளவர்கள் உள்ளமதில் நாடும் உய்ய
பதவிதனைத் தந்துவிட்டால் போதா தென்றே-நாளும்
பல்வேறு விதமாக நினைக்க இன்றே!
சதமலவே இவ்வுலகில் எதுவும் என்றும்- கால
சக்கரமே சுழல்கிறது அறிவோம் நன்றும்!


புலவர்  சா  இராமாநுசம்

Monday, December 1, 2014

தீதுபல நீங்கும் தெளி !


நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடலாமே !-என்றேதான்
ஓதியநல் வள்ளுவரின் உண்மைதனை ஓர்ந்தாலே
தீதுபல நீங்கும் தெளி

புலவர்  சா  இராமாநுசம்

Saturday, November 29, 2014

ஆகின்ற ஒன்றா அது !


ஆண்டான் அடிமை  அகம்பாவம்   தீராதோ
ஈண்டார்  வருவாரோ  ஏங்குகிறேன் –வேண்டாவே
போகின்ற போக்கிங்கே போகும்வழி நோக்கற்றே
ஆகின்ற ஒன்றா அது

புலவர்  சா  இராமாநுசம்


Friday, November 28, 2014

பொல்லாதாம்! என்றே புகல் !




சாதியெனும்  தீயிங்கே சாகாமல் தானிருக்க
நீதியெனும் ஒன்றெங்கோ  போயிற்றாம் –ஆதியிலே
இல்லாத  ஒன்றலவா ஏனிந்த வன்கொடுமை
பொல்லாதாம்! என்றே புகல்

Thursday, November 27, 2014

கண்ணில் தெரியக் கயிறு!



தங்கம் விலைகண்டே தான்திருட கள்வர்களும்
எங்குமதைத் தேடுகின்றார் இன்றதனால்- மங்கையரே
எண்ணி நடப்பீரே எப்படிதான் காப்பீரோ
கண்ணில் தெரியக் கயிறு!

Wednesday, November 26, 2014

அம்மா! அறுக்கும் அது !



நாள்காட்டி தானெடுத்தோர் நாளைக் கிழிப்பதுவும்
தாளென்று எண்ணாதீர்! தப்பாகும்! –வாளாகி,
நம்வாழ்வில்! நாளொன்று போனதென நாமறிய
அம்மா! அறுக்கும் அது

புலவர்  சா  இராமாநுசம்

Saturday, November 22, 2014

கண்ணிலொரு கோளாறே !காட்ட மருத்துவரும்



கண்ணிலொரு கோளாறே !காட்ட மருத்துவரும்
எண்ணிலொரு வாரம்தான் ஓய்வெடுக்க –சொன்னார்
ஆகவே,அருள்கூர்ந்து, அன்பரே என்துன்பம்
போகவே வேண்டுவ ! விரைந்து.

புலவர்  சா  இராமாநுசம்

Thursday, November 20, 2014

தேடிக் கொணர்ந்த திரு !



கோடி இருந்தென்ன கோபுரம்போல் வீடதனில்
மாடி இருதென்ன மாண்புடனே – நாடியதும்
ஓடி உவந்துவரும் உற்றதுணை யானவளே
தேடிக் கொணர்ந்த திரு

புலவர்  சா   இராமாநுசம்

Wednesday, November 19, 2014

எண்ணில் சிறப்பாம் இயம்பு !



உள்ளொன்று வைத்தே உறவாடி நட்பாகும்
கள்ளமனம் கொண்டாரைக் காண்பீரேல் –எள்ளியவர்
கண்ணில் படாமல் கடந்தேநாம் போவதுவே
எண்ணில் சிறப்பாம் இயம்பு

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, November 18, 2014

நித்தம் ஒருவெண்பா நிச்சியமாய் நானெழுத



நித்தம் ஒருவெண்பா நிச்சியமாய் நானெழுத
சித்தம் வைத்திட்டேன் செம்மொழியில்! –எத்தனைபேர்,
காண்பாரோ நானறியேன்! கண்டே, எனையூக்க
தூண்டிவிடு வாரா தொடர்ந்து

புலவர்  சா  இராமாநுசம்

Sunday, November 16, 2014

வான் சிறப்பு ! குறள் வழி வெண்பா!



கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழையே –தொடுத்திட்ட
வள்ளுவரின் சொற்படியா  வந்திங்கே பெய்துவிட்டே
செல்லுகின்றாய் வான்மழையே செப்பு

புலவர்  சா  இராமாநுசம்

Friday, November 14, 2014

குழந்தைகள் தினம் !


குழந்தைகள் தினம்
----------------------------------
சின்னஞ் சிறுக்குழவி
சிங்கார இளங்குழவி
கன்னம் குழிவிழவும்
களுக்கென்று நீசிரிப்பின்
அன்னை முகமாகும்
அன்றலரும் தாமரைபோல்
தன்னை மறந்ததவளும்
தாலாட்டுப் பாடுவாளாம்


பூவின் இதழ்போல
பொக்கை வாய்விரிய
நாவின் சுவைஅறிய
நறுந்தே னைதடவிட
பாவின் பண்போல
பைந்தமிழ் சுவைபோல
காவின் எழில்போல
களிப்பாயே தேன்சுவையில்

கண்ணே நீ உறங்கு
கற்கண்டே நீ உறங்கு
விண்ணில் தவழ்கின்ற
வெண்மதியே நீ உறங்கு
வண்ண மங்கா மல்
வரைந்தநல் ஓவியமே
மண்ணை வளமாக்கும்
மழையே நீயுறங்கு

கொஞ்சும் மழலைக்கோர்
குழலிசையும் ஈடாமோ
பஞ்சின் மெல்லிய சீர்
பாததில் நீ நடப்பின்
அஞ்சிடும் அன்னைமனம்
அடிதவறி விழுவாயென
நெஞ்சிலே சுமந் திடுவாள்
நீவளரும் வரை யவளே

புலவர் சா இராமாநுசம்

Thursday, November 13, 2014

நாணாதோ நம்நாடும் நன்று


இட்டபயிர் போயிற்றே! ஏர்பிடித்தோன் என்செய்வான்
திட்டமென்ன ஆள்வோரே எண்ணுங்கள் –நட்டமதை
ஈடுசெய்ய இல்லைவழி !ஏங்குகின்ற அன்னவனின்
கேடுநீங்க வேண்டாமா கூறு

உண்டி கொடுத்தும் உயிர்வாழ நன்றே
தொண்டு தனைசெய்தோன் துன்பமுற-விண்டாலும்
காணாதே கண்மூடி காண்பதுவோ! ஆள்வோரே
நாணாதோ நம்நாடும் நன்று

புலவர்  சா  இராமாநுசம்

Monday, November 10, 2014

ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!


நிழலிங்கே நிஜமெங்கே நிலமை ஆச்சே –நாட்டில்
நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!
விழலுக்கே நீர்பாய்ச்சி வீணாய்ப் போனோம் –புலம்பி
விம்முவதில் பயனில்லை! சிலையே ஆனோம்!
தழலுக்கு சுடுவதுதான் இயல்பு தாமே –தெரிந்தும்
தடம்மாறி வீழ்ந்ததுவும் அந்தோ நாமே!
சுழலுக்குள் சிக்கிவிட்ட கதைதான் இன்றே-கவிதை
சொல்லுவது புரிந்தாலே போதும் நன்றே!


ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை
உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!
நாட்டைத்தான் கெடுத்தவர்கள் நாமே ஆகும் –தேர்தல்
நாடகத்தில் இன்றுவரை! துயரா போகும்!
கோட்டைதான் குறிக்கோளாய் கொள்கை என்றே-ஆட்சிக்
கோலோச்ச கட்சிகளும் கூடி நின்றே!
காட்டைத்தான் வீடாக்கி விட்டார்! நாளும் –ஏழை
கண்ணீரைத் துடைப்பதற்கு இன்றே ஆளும்!

பட்டதுயர் போதுமினி படவும் இயலா – நம்மின்
பகுத்தறிவு அணுவளவும் என்றும் முயலா!
இட்டபடி ஆள்வோரே வருவா ராக-நீங்கா
இன்னல்தான் நிலையென்ற நிலமை போக!
திட்டமிட்டு செயல்படுவோர் ஆட்சி வருமா –மக்கள்
தேவைகண்டு சேவைசெய்யும் திருநாள் தருமா!
குட்டதலை குணிவதுவோ! இனியும் வேண்டாம்-நிமிர
குறைதீரும்! காலமது கனியும்! ஈண்டாம்!

புலவர் சா இராமாநுசம்

Saturday, November 8, 2014

என், முகநூலில் வந்தவை ! வலையில் படிக்கத் தந்தவை !





வாள்முனைப் பெரிது என்றான் நெப்போ லியன்
பேனாமுனைப் பெரிது என்றான் வால்டேர்
அறிவு முனைப் பெரிது என்றார் பெர்னாட்சா
ஒழுக்கமே பெரிது என்றார் திருவள்ளுவர்
ஒழுக்கமில்லாத்தவன் கையில் உள்ள வாளும்
பேனாவும் அவனது அறிவும் பயனற்றதாகும்!

சிரியுங்கள் அது நெஞ்சின் இசை
சிந்தியுங்கள் அது ஆற்றலின் ஊற்று
படியுங்கள் அது அறிவின் வளர்ச்சி
உழையுங்கள் அது வெற்றியின் இரகசியம்
விளையாடுங்கள் அது இளமையின் கொடை!

கல்லில் உயிர் உறங்குகிறது
தாவரத்தில் உயிர் அசைகிறது
விலங்குகளில் உயிர் வெளிப்படுகிறது
மனிதனிடம் உயிர் வேலை செய்கிறது
மகானிடம் உயிர் பணி செய்கிறது

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...